திண்டுக்கல் : தெருவெங்கும் சுற்றி அனைத்தையும் சேதப்படுத்தும் மாடுகள், வீட்டிற்குள் புகுந்துவிடும் தெருநாய்கள் என நாள்தோறும் இன்னல்களுக்கு உள்ளாகின்றனர் திண்டுக்கல் மாநகராட்சி 2 வார்டு மக்கள்.ஆர்.எம்.காலனி, மேற்கு அசோக் நகர், செட்டிநாயக்கபட்டி வண்டிபாதை என பல்வேறு பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும் முக்கிய பிரச்னையாக அப்பகுதி மக்கள் தெரிவிப்பது மாடுகளின் நடமாட்டமும், தெருநாய்களின் அட்டகாசமும்தான்.பிற பகுதிகளிலிருந்து மாடுகளை கொண்டு வந்து விட்டுச் செல்கின்றனர். அவை குப்பையை திண்பது, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருப்பது என பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக மாடுகளின் கூடாரமாக இப்பகுதி இருக்கிறது. மாடுகளின் உரிமையாளர் யார் என்பதே தெரியவில்லை என்கின்றனர் இப்பகுதியினர். தெருநாய்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் குழந்தைகளை வைத்துக்கொண்டு பெரிதும் அவதிப்படுவதாக பெண்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக தினமும் இரவு 10 :00மணி வரை நாய்களை விரட்டி விட்டுதான் துாங்க செல்வதாக வார்டு மக்கள் கூறுகின்றனர்.குப்பை தொட்டி இல்லா மாநகராட்சி என்ற பெயரில் குப்பைத் தொட்டிகளை அகற்றியதால் குப்பை ஆங்காங்கே கொட்டப்படுகின்றன. துாய்மை பணியாளர்களும் 2 நாட்களுக்கு ஒரு முறை தான் வருகின்றனர். மாநகராட்சியிடம் பலமுறை கூறியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. தாடிகொம்பு ரோட்டில் உள்ள அங்கன்வாடி மையம் வாகனங்கள் அதிகம் செல்லும் ரோட்டின் ஓரத்திலே உள்ளது. குழந்தைகள் மையத்தை விட்டு அவசரமாக வந்தால் கூட விபத்திற்கு வழி வகுத்துவிடும். செடிகளை நாசம் செய்கிறது
ஸ்ரீதர், ஆர்.எம்.காலனி: மாடுகள் அதிகளவில் தெருக்களில் உலாவுகின்றன. நட்டு வைத்திருக்கும் செடிகளை எல்லாம் நாசம் செய்து விடுகிறது. குறிப்பாக குப்பையை கிளறி ரோட்டில் கொண்டு வந்து விடுகின்றன. ஆர்.எம்., காலனி பிரதான ரோட்டில் வந்து மாடுகள் நிற்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். வெயில் அடிக்க ஆரம்பித்தால் ரோட்டோர நிழற்பகுதிகளில் கும்பலாக மாடுகள் வந்து விடுவதால் அப்பகுதியை கடப்பதே பெரும் பாடாய் இருக்கிறது. மாடுகள் முட்டி சிலர் காயமடைந்துள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். நிர்வாகத்திடம் தெரிவித்தும் நோ யூஸ்
ேஹமலதா, மேற்கு அசோக் நகர் : குப்பைத் தொட்டிகள் இல்லாததால் பெரும் சிரமமாக உள்ளது. குப்பையை ரோட்டிலேயே கொட்டிச் செல்கின்றனர். குப்பை அள்ளுவோரும் தினமும் வருவதில்லை. 2 நாட்களுக்கு ஒரு முறை வருகின்றனர். மழை பெய்தால் குப்பையில் தண்ணீர் தேங்குகிறது. துார்நாற்றம் வீசுவதோடு நோய்தொற்று ஏற்படும் சூழலும் உருவாகிறது. இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் பயனில்லை. நாய்கள் அட்டகாசம் அதிகம்
ஸ்ரீதர், வண்டிபாதை ரோடு :நாய்கள் வீடுகளுக்குள் புகுந்து விடுவதால் குழந்தைகளை வைத்துக் கொண்டு அச்சமாக வாழ்கிறோம். எத்தனையோ முறை கூறிவிட்டோம். தெரு நாய்களை கட்டுப்படுத்தவே முடிவதில்லை. குப்பை, சாக்கடைகளில் புரண்டு விட்டு தெருக்களில் வருவதால் நோய் தொற்று சூழலும் ஏற்பட்டுள்ளது. சில நாய்கள் என்றால் பரவாயில்லை.கணக்கில்லாமல் வருவதால் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அனுதினமும் நாய்களோடு அவதிப்பட வேண்டியதாக உள்ளது. பல முறை பேசிவிட்டேன்
கணேசன், கவுன்சிலர் ( மா.கம்யூ.,) : மாடு, நாய்கள் பிரச்னைகள் உள்ளது. பல முறை நானும் மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டு , மாமன்ற கூட்டத்திலும் பேசியிருக்கிறேன். மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரிந்தே இந்த விவகாரம் நடக்கிறது. மாடுகளின் உரிமையாளர்கள் யார் என மாநகராட்சிக்கு தெரிந்தும் கண்டும் காணாததுபோல் இருக்கின்றனர். கலெக்டர் தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும். குப்பை விவகாரத்தில் கண்டுகொள்ளவே மாட்டேன் என்கின்றனர்.குப்பை அள்ளுவதே இல்லை. சுகாதார ஆய்வாளர்கள் முதல் கமிஷ்னர் வரை அத்துனை பேரிடமும் முறையிட்டு பிரயோஜனம் இல்லை. மாநகராட்சி நிர்வாகம் ஒத்துழைத்தால் அனைத்து பிரச்னைகளும் விரைவில் சரியாகிவிடும் என்றார்.