உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சார்பதிவாளர் அலுவலகங்களில் ரெய்டு ரூ.3 லட்சம் பறிமுதல்

சார்பதிவாளர் அலுவலகங்களில் ரெய்டு ரூ.3 லட்சம் பறிமுதல்

கன்னிவாடி:திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி, தென்காசி மாவட்டம் கடையம் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ. 3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.கன்னிவாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாக புகார் எழுந்தது. நேற்று மாலை 6:00 மணிக்கு சார்பதிவாளர் செந்தில்குமார், அலுவலக ஊழியர்கள் 4 பேர், பத்திர எழுத்தர்கள் 2 பேர் அலுவலகத்தில் இருந்தனர். அப்போது திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., நாகராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பழனிசாமி, ரூபாகிருபாராணி கொண்ட குழுவினர் அலுவலகத்திற்குள் வந்தனர். வெளிக்கதவை பூட்டிவிட்டு சோதனை நடத்தினர். ஊழியர்களின் உணவுக்கூடை, பத்திர எழுத்தர்களிடம் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 300 ரூபாய் இருந்தது. இதை பறிமுதல் செய்தனர். இரவு 8:00 மணி வரை நடந்த சோதனையில் பல்வேறு ஆவணங்களை எடுத்து சென்றனர்.

கடையத்திலும் சோதனை

கடையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., பால் சுதர், தலைமையில் எஸ்.ஐ.,ரவி, சிறப்பு எஸ்.ஐ.க்கள் ராஜா, பிரபு ஆகியோர் நேற்று மாலை 6:00 மணியளவில் திடீர் சோதனை மேற்கொண்டனர். போலீசார் வருவதற்கு சற்று முன்பு புரோக்கர்கள் அங்கிருந்து வெளியேறி விட்டனர். சார்பதிவாளர் பைசூல் ராணியிடம் இருந்து கணக்கில் வராத பணம் ஒரு லட்சத்து 59 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இரவிலும் சோதனை தொடர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !