| ADDED : ஆக 16, 2024 02:07 AM
கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. 2 வது நாளாக நேற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான கொடைக்கானல்,அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழை பெய்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.தற்போதைய மழையால் திடீர் நீர்வீழ்ச்சிகள் உருவாகியுள்ளன. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மழை நீர் ரோட்டில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரால் விவசாய பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொடைக்கானலில் 3 நாட்களாக மொத்தம் 120 மி.மீ., மழை பதிவானது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது சாரல் பெய்யும் நிலையில் பயணிகள்ஏரியில் படகு சவாரிசெய்தனர்.போக்குவரத்து பாதிப்பு
நாயுடுபுரம் குறிஞ்சி ஆண்டவர் கோயில் சந்திப்பு ரோட்டில் மழையால் ரோடு சேதமடைந்து ராட்சத பள்ளம் ஏற்பட்டது. இதனால் குறுகிய ரோடான இப்பகுதியில் வாகனங்கள கடந்து செல்ல முடியாமல் 2வது நாளாக அவதி ஏற்பட்டது. வாகனங்கள் விபத்தில் சிக்கின.நேற்று முன்தினம் இரவு நெடுஞ்சாலைத்துறை பள்ளத்தை கண்துடைப்பாக சீர் செய்த போதும் மீண்டும் மழை பெய்து மேலும் சேதமானது. இதனால் பல மணிநேர போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு நாயுடுபுரம், ஏரிச்சாலை சந்திப்பு வரை வாகனங்கள் ஊர்ந்து சென்றன. சேதமடைந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.