| ADDED : ஜூன் 02, 2024 04:33 AM
திண்டுக்கல்: தினமலர் செய்தி எதிரொலியாக திண்டுக்கல் நகரில் செயல்படாத நீர் மோர் பந்தல்கள் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.கோடை வெயிலை மக்கள் சமாளிக்கும் வகையில் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட், பழநிரோடு, நாகல்நகர் உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட இடங்களில் திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டது. சில நாட்கள் மட்டுமே செயல்பாட்டில் இருந்த நீர், மோர் பந்தல்களை முறையாக கண்காணிக்காமலும், பராமரிக்காமலும் விட்டதால் பயன்படாமல் வெறும் பந்தலாகவே காட்சியளித்தது. திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் உள்ள நீர், மோர் பந்தலில் தண்ணீர் இருப்பதாக நினைத்து குடிக்க வரும் பயணிகள் வெறும் பந்தலைப் பார்த்து ஏமாந்து செல்லும் நிலை ஏற்பட்டது.இது குறித்த செய்தி தினமலர் நாளிதழில் நேற்று வெளியானது. இதன் எதிரொலியாக கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவில் பொறியாளர் சுப்பிரமணியன்,உதவி செயற்பொறியாளர் சாமிநாதன் தலைமையிலான அதிகாரிகள் நகர் பகுதியில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தல்களை ஆய்வு செய்து குடிநீர், மோர் வழங்க ஏற்பாடுகள் செய்தனர்.