| ADDED : ஆக 02, 2024 06:34 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் பழநி ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கொண்டிருந்த மாநகராட்சி அதிகாரிகளிடம் தி.மு.க.,கவுன்சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.திண்டுக்கல் பழநி ரோட்டில் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். அதன்படி நேற்று மாநகர திட்டமிடுநர் ஜெயக்குமார்,பொறியாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் பழநி ரோட்டில் மாநகராட்சி,நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான நிலத்திலிருந்த ஓட்டல் ஒன்றை மண் அள்ளும் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதையறிந்த தி.மு.க., கவுன்சிலர் ஆனந்த்,ஓட்டலை இடிக்க வேண்டாம். கால அவகாசம் கொடுங்கள் அதிலுள்ள பொருட்களை எடுத்து கொள்கிறோம் என அதிகாரிகளிடம் கோரினார். அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறுது நேரத்தில் பிரச்னை முடிவுக்கு வர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதுதவிர அதே பகுதியிலிருந்த ஆட்டோ ஸ்டாண்ட்,தனியார் நிறுவனங்களில் கூரைகள்,விளம்பர பேனர்களும் அகற்றப்பட்டது.