உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சாக்கடை இல்லாத தெருக்கள், பணம் கொடுத்தாலே அள்ளப்படும் குப்பை அல்லல்படும் திண்டுக்கல் கூட்டுறவு மலர்கள் நகர் குடியிருப்போர்

சாக்கடை இல்லாத தெருக்கள், பணம் கொடுத்தாலே அள்ளப்படும் குப்பை அல்லல்படும் திண்டுக்கல் கூட்டுறவு மலர்கள் நகர் குடியிருப்போர்

திண்டுக்கல்: ஆக்கிரமிப்புகள், சாக்கடை இல்லாத தெருக்கள், பணம் கொடுத்தால் அள்ளப்படும் குப்பை என திண்டுக்கல் கூட்டுறவு மலர்கள் நகர் குடியிருப்பு வாசிகள் தவியாய் தவிக்கின்றனர்.திண்டுக்கல் - திருச்சி ரோட்டில் கூட்டுறவு வங்கியை ஒட்டி அமைந்துள்ளது கூட்டுறவு மலர்கள் நகர் குடியிருப்போர் சங்க தலைவர் ஆனந்த், செயலாளர் சர்தார், நிர்வாகிகள் ஞானகுரு, சுப்பிரமணியன், விஜயலட்சுமி கூறியதாவது : இங்கு பிரதான பிரச்னையே சாக்கடை இல்லாதுதான். ஒரு மழை பெய்தால் கூட கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. ஏற்கனவே சாக்கடை பெரிதாக இருந்த நிலையில் சரிசெய்கிறேன் என்ற பெயரில் சிறிதாக்கி விட்டனர். இதனை துார்வாருவதே கிடையாது. எப்போதும் கழிவு நீர் தேங்கி கொசு உற்பத்திக்கு வழி வகுக்கிறது. குறிப்பாக குப்பை அள்ளப்படுவதில்லை. ஊராட்சி சார்பில் குப்பை அள்ள தனியாரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்தகாரரோ கண்டு கொள்வதே இல்லை. குப்பை அள்ள வருவோர் பணம் கொடுத்தால் தான் அள்ளுவோம் என குடியிருப்பு வாசிகளிடம் கேட்கின்றனர். ஒரு வீட்டில் பணம் கொடுக்கவில்லை என்றால் அந்த வீட்டு குப்பையை எடுப்பதில்லை. இதனால் நாங்களே பணம் வசூலித்து தனிநபர்களை வைத்து குப்பையை அள்ளி வருகிறோம். அதோடு கண்ட இடத்தில் குப்பையை கொட்டி எரிக்கின்றனர்.

வேண்டாம் மது பான பார்

தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. எங்கிருந்து நாய்கள் வருகின்றதென்பதே தெரியவில்லை. நக்கீரன், இளங்கோவன் தெரு 40 அடி ரோடு ஆக்கிரமிப்பால் 20 அடியாக உள்ளது. ஆக்கிரமிப்பாளர்களிடம் கேட்டால் எடுக்கும் போது பார்த்துக் கொள்ளலாம் என அலட்சியமாக பதில் தெரிவிக்கின்றனர். ரோடுகளை மில்லிங் செய்து புதிய ரோடு போடுவதில்லை. இதானல் வீடுகள் பள்ளத்திலும், ரோடுகள் மேட்டிலும் இருக்கிற சூழல் நிலவுகிறது. இதனால் மழை பெய்தால் தண்ணீர் வீடுகளில் புகுகின்றன. அது வடிந்து இயல்பு நிலை திரும்புவதற்குள் போதுமென ஆகிவிடுகிறது. இப்பகுதியில் புதிதாக கட்டடம் ஒன்று கட்டி வருகின்றனர். அதில் மதுபான பார் வரப்போவதாக தெரிவிக்கின்றனர். மருத்துவமைன, வங்கி, குடியிருப்பு வாசிகள் உள்ள இடத்தில் இவ்வாறு அமைப்பது சிக்கலில் முடியும். வரும் முன்பே தடுக்கப்பட வேண்டும்.ரோஜா, முல்லைத் தெருக்களில் சாக்கடையே இல்லை. இதனால் தண்ணீர் ரோடுகளில் தேங்குகிறது. குப்பைகளும் அள்ளப்படாததால் குப்பை சேர்ந்து நோய் தொற்றை உருவாக்கி விடுகிறது. நுாலகம் கடமைக்கென உள்ளது. பயன்படுத்தப்படுவதே இல்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை