| ADDED : மே 09, 2024 06:27 AM
செந்துறை: நத்தம் புனித சூசையப்பர் சர்ச் திருவிழா சப்பர பவனியில் ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.மே5ல் மாலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதில் பாதிரியார்கள்இன்னாசிமுத்து,மரியபிரான்சிஸ் பிரிட்டோ, மைக்கேல்ராஜ்,ஆசீர் ஜான்சன், செபாஸ்டீன்அருண் பங்கேற்று கொடியேற்றினார்கள். விழாவின் ஒவ்வொரு நாளும் மாலை 6:00 மணிக்கு திருப்பலியும், மறையுரை, நற்கருணை ஆசீரும் நடந்தது. மே 6ல் மாலை புனித செபஸ்தியார் வேண்டுதல் பொங்கல் வைத்தல்,இரவு புனித செபஸ்தியார் வேண்டுதல் சப்ரபவனியும், அன்பின் விருந்தும் நடந்தது. மே 7 ல் பொது பொங்கல் வைத்தலை தொடர்ந்து இரவு ஆடம்பர திருவிழா திருப்பலி, நற்கருணை பவனியும், அனைவருக்கும் அன்பின் விருந்தும் நடந்தது. நேற்று அதிகாலை,மாலையிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புனிதர்களின் பவனி நடந்தது. அப்போது குழந்தைகளை புனிதர்களின் காலடியில் வைத்து மக்கள் வழிபாடு செய்தனர். உப்பு,பொரிகளை செலுத்தினர். விவசாயம் செழிக்கவும்,மழை வேண்டியும் சிறப்பு திருப்பலி நடந்தது. இன்று காலை முதல் திருவிருந்து திருப்பலியும் நடப்பதை தொடர்ந்து மாலை நற்கருணை பவனி பழைய கோயிலிலிருந்து புறப்பட்டு பங்கு ஆலயத்தை வந்தடைந்து கொடியிறக்கம் செய்து திருவிழா நிறைவடையும்.