| ADDED : ஜூன் 02, 2024 04:34 AM
தொற்று நோய் பரவலையும், பாதிப்புகளையும் வெகுவாக குறைக்க நோய் கண்காணிப்பு பணிக்கென நிரந்தர மஸ்துார் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை ஒருங்கிணைந்து, தற்காலிக பணியாளர்களை கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடுத்தி வருகின்றன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்ப இப்பணியாளர்களின் எண்ணிக்கை உள்ளது. நோய் கண்காணிப்பு, அனைத்து வீடுகளிலும் கொசுப்புழு ஆய்வு செய்வது தண்ணீர் தேங்காத சூழலை கண்காணித்தல், கொசுப்புழு ஒழிப்புக்கான குளோரினேஷன் தெளிப்பு, தண்ணீர் தேக்கத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். விரிவாக்கப் பகுதிகளில் அதிகரிக்கும் குடியிருப்புகள், மக்கள் தொகை பெருக்கம் போன்ற காரணங்களால் மஸ்துார் பணியாளர்களின் தேவை வெகுவாக அதிகரித்து வருகிறது. அதே வேளையில் பொதுமக்களிடம் டெங்கு பரவலை தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது தற்போதைய அவசிய தேவையாக உள்ளது.திறந்த வெளியில் கிடக்கும் தேங்காய் சிரட்டை, பயன்பாடற்ற டயர்கள், தண்ணீர் தொட்டிகள், பிரிட்ஜ் பின்புறத்தில் உள்ள நீர் தேங்கும் பகுதி போன்ற அமைப்புகளில் தண்ணீர் தேங்குவதன் மூலம் இந்த வகை கொசு புழுக்களின் உற்பத்தி பல மடங்கு பெருகுகிறது. நோய் பாதிப்பு குறித்த அறிகுறிகள் தென்பட்ட போதும் அரசு மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்து கொள்ள பலரும் தயக்கம் காட்டுகின்றனர். கிராம கடைகளில் கிடைக்கும் மலிவு விலை மருந்து, மாத்திரைகள் மூலம் அவற்றை குணப்படுத்த முயற்சிக்கின்றனர். இவை உடல் சார்ந்த பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. உள்ளாட்சி அமைப்புகளும் தண்ணீர் தேங்கும் கட்டமைப்புகளை அப்புறப்படுத்துவதற்கான பணியில் ஈடுபட வேண்டும். மாவட்ட நிர்வாகம் இவை தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முடுக்கி விட முன்வர வேண்டும்.