தாடிக்கொம்பு, : டி.அய்யம்பாளையம் காலனியில் உள்ள சுகாதார வளாகம் கட்டணத்தால் பொது மக்கள் பயன்படுத்த முன் வராத நிலையில் வீணாக மக்கள் திறந்த வெளியை நாடும் நிலை தொடர்கிறது.தாடிக்கொம்பு பேரூராட்சி டி.அய்யம்பாளையம் காலனியில் காவிரி குடிநீர் குழாய் அமைக்கப்பட்டும் இதுவரை காவிரி குடிநீர் வந்து சேரவில்லை. இங்குள்ள 3 தெருக்களில் ஒரு தெருவில் மட்டுமே ரோடு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. மேற்குத் தெரு நடப்பதற்கே பயனற்றுள்ளது. இப்பகுதி மக்களின் நலன் கருதி 2013 -- 14 ல் திறந்தவெளி கழிப்பிடத்தை ஒழிக்கும் திட்டத்தின் கீழ் ஆண், பெண் என இரு பாலருக்கும் சேர்த்து குளியலறை, கழிப்பறை, துணி துவைக்கும் இடம், குளிக்கும் இடம், போர்வெல் அமைத்து தண்ணீர் என சகல வசதிகளுடன் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த வளாகம் கட்டப்பட்டதிலிருந்தே பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராத நிலையில் கட்டடம் சிதிலமடைந்து பயன்படற்று உள்ளது. பெரும்பாலான வீடுகளில் கழிப்பறை இல்லாத நிலையில் பொது வெளியை நாடுகின்றனர். கட்டணத்தால் கட்டடம் வீண்
வி.கல்யாண ராஜா, டெய்லர் : சுகாதார வளாகத்தை கட்டியதிலிருந்தே மகளிர் சுய உதவி குழுவினரிடம் ஒப்படைப்பதாக கூறினர்.ஒரு நபர் உள்ளே சென்று வர ரூ.5 கட்டணம் என்றனர். பேரூராட்சி பகுதியாக இருந்தாலும் குக்கிராமத்தில் தினமும் மக்கள் ரூ.ஐந்து கொடுத்து சுகாதார வளாகத்திற்கு சென்று வர முடியுமா . இதனாலே இந்த திட்டம் வீணானது.தற்போது சுகாதார வளாகம் எதற்கும் பயன்படாது உள்ளது. பொதுமக்கள் தான் குளியலறை, கழிப்பறை வசதிகள் இன்றி சிரமப்படுகின்றனர். இப்பகுதி மக்களின் நலன் கருதி கட்டணம் இல்லாத வகையில் சுகாதார வளாகத்தை கட்டித் தர வேண்டும் . சிமென்ட் ரோடும் இல்லை
ஜி.பாலம்மாள், குடும்பத் தலைவி : சுகாதார வளாகம் கட்டியதில் இருந்தே பயன்பாடற்றுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை வந்து யார் யாரோ பார்வையிட்டு செல்கின்றனர். ஆனால் புதிய சுகாதார வளாகம் வந்தபாடு இல்லை. கிழக்குத் தெருவுக்கு சிமென்ட் ரோடும் முறையாக இல்லை. தண்ணீர் வசதியுடன் சுகாதார வளாகம் இருந்தால் இப்பகுதி மக்களுக்கும் பள்ளி குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் . பள்ளி சிறுவர்கள் அவதி
கே.கதிர்வேல், நுாற்பாலை தொழிலாளி : விபரம் தெரிந்ததிலிருந்து இந்த பொதுக் கழிப்பறை பயன்பாடற்று இப்படியேதான் உள்ளது. பொதுமக்கள் , பள்ளி சிறுவர்கள் தான் காலை நேரங்களில் அவதிப்படுகின்றனர். புதிதாக சுகாதார வளாகத்தை கட்டித் தர வேண்டும். இந்த ஊருக்கு காவிரி குடிநீரும் இதுவரை வந்ததே இல்லை. மேற்கு தெரு சிமென்ட் ரோடு சேதமடைந்துள்ளது. இங்கிருந்து 20 க்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் வேடசந்துார் செல்கின்றனர். காலை நேரத்தில் அரசு டவுன் பஸ் ஒன்று அய்யம்பாளையம் வந்து வேடசந்துார் சென்றால் இப்பகுதி மக்கள் , பள்ளி மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.