| ADDED : ஜன 10, 2024 12:56 AM
கொடைக்கானல்:கொடைக்கானல், தாண்டிக்குடியில் நேற்று காலை முதலே கனமழை கொட்டி தீர்த்த நிலையில் கொடைக்கானலில் 48 மி.மீ., பதிவாகி உள்ளது.காற்றழுத்த தாழ்வு நிலையால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சில தினங்களாக பரவலாக சாரல், மிதமான மழை பெய்தது.நேற்று காலையில் மிதமான மழை தொடங்கி மதியம் கனமழையாக கொட்டியது. அடர்ந்த பனிமூட்டம், சூறைக்காற்று வீசியதால் சுற்றுலா நகரான கொடைக்கானலில் இயல்பு வாழ்க்கை பாதித்தது. மழை நீர் ரோட்டில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. மாலை 5:00 மணிக்கு பின் மழையின் தாக்கம் சற்று குறைந்த நிலையில் சூறைக்காற்று வீசியது. கொடைக்கானல் நகர், மேல் மலை, தாண்டிக்குடி, கீழ்மலை பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.கொடைக்கானல் - பூம்பாறை செல்லும் ரோட்டில் காற்றுக்கு மரம் விழுந்த நிலையில் பொதுமக்கள் அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். மாலை 5:00 மணி நிலவரப்படி கொடைக்கானலில் 48 மி.மீ., மழை பதிவானது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து கடும் குளிர் நிலவியது. முக்கிய சுற்றுலாத்தலங்கள் பயணிகளின்றி வெறிச்சோடி காணப்பட்டன. மலைப் பகுதியில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியதால் காய்கறி பயிர்கள் அழுகும் அபாயம் உள்ளது.