| ADDED : மார் 08, 2024 01:43 AM
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பகுதியில் பத்து ரூபாய் நாணயத்தை டீக்கடைகள், பேக்கரிகள், வர்த்தக நிறுவனங்களில் வாங்க மறுப்பதால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.பத்து ரூபாய் நாணயம் குறித்த பிரச்னை இன்னும் தீர்ந்த பாடு இல்லை. இந்த நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே செல்லாது என்ற நிலைத்தொடர்ந்து இருந்து வருகிறது. ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தால் உண்மையாகிவிடும் என்பது போல் பத்து ரூபாய் நாணயத்தை பல கடைகளில் வாங்க மறுப்பதால், பொதுமக்களும் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் தான் இந்த நிலை. மற்ற மாவட்டங்களில் பத்து ரூபாய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் பகுதியில் இன்னும் போதிய விழிப்புணர்வு இல்லாததால் இந்த நிலை தொடர்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அனைத்து டீக்கடைகள், பேக்கரிகள் ,வர்த்தக நிறுவனங்களிலும் பத்து ரூபாய் நாணயம் வாங்கப்படும் என்ற அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். அப்போதுதான் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிட்டும்.