திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மரங்களில் ஆணி அடித்து விளம்பர போர்டுகள் மாட்டுவஐ பெயிண்ட் அடிப்பது போன்றவை அதிகரித்துள்ளது. இதனால் மரங்களின் ஆயுள் குறைந்து விரைவில் பட்டுப்போகும் நிலை ஏற்படுகிறது. மாவட்டம் அதிகளவில் நெடுஞ்சாலைகள், மாநில சாலைகளைக் கொண்டது. விவசாய மாவட்டம் என்பதால் மரங்களின் எண்ணிக்கையும் அதிகம். கொடைக்கானல், பழநிக்கு வெளி மாவட்ட, மாநில பயணிகளின் வருகையும் உள்ளது. இதனால் அவர்களின் கவனம் ஈர்க்கும் பொருட்டு ரோட்டோரங்களில் உள்ள மரங்களில் ஓட்டல் நிர்வாகங்கள், ஜவுளி நிறுவனங்கள், கல்வி, பயிற்சி நிறுவனங்கள், பல்வேறு தனியார் நிறுவனங்கள் சார்பில் அதிகளவில் விளம்பர போர்டுகளை மரங்களில் ஆணியடித்து வைக்கின்றனர். குறிப்பாக மக்கள் கூடும் இடங்களான பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், முக்கிய சந்திப்பு வீதிகள், ரோடுகள் இருந்தால் ஒரு மரத்தில் குறைந்தபட்சம் நுாற்றுக்கு மேற்பட்ட ஆணிகள் அடித்து விளம்பரங்கள் வைக்கப்படுகின்றன. பூவரசு, பனைமரம், ஆலமரம், அரசமரம், புங்கை மரம் உள்ளிட்ட நன்கு வளர்ந்த மரங்களின் மீது பார்வையில் படுமாறு ஆணியால் அடித்தும் இரும்பு கம்பி யால் சுற்றி வைத்தும் கட்டுகின்றனர். போதா குறைக்கு பெயிண்ட் அடித்தும் பாழ்படுத்துகின்றனர். இது போன்ற செயல்களால் மரங்களின் ஆயுள் குறைந்து, பட்டுப்போகும் நிலை ஏற்படுகிறது. இதனை தடைசெய்ய உள்ளாட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மரங்களுக்கும் உயிர் உண்டு
ரோட்டோரங்களில் உள்ள மரங்களில் அறிவிப்புகள், விளம்பரங்கள் அடங்கிய அட்டைகளை பெரிய ஆணி கொண்டு அடித்து தொங்க விடுகின்றனர். மனிதர்களை போல் மரங்களுக்கும் உயிர் உண்டு. மரங்களில் ஆணி அடிப்பது மரங்களுக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பதைப் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆணி அடிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பாலசுந்தரம்,சமூக ஆர்வலர், திண்டுக்கல்