| ADDED : ஜூன் 26, 2024 06:56 AM
திண்டுக்கல் : ''கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக பா.ஜ., நடத்திய ஆர்பாட்டத்தின் போது தி.மு.க., அரசு அடக்குமுறையை கையாண்டது கண்டிக்கத்தக்கது ''என பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் புரட்சிகவிதாசன் கூறினார்.திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது : 1975 ஜூன் 25ல் காங்., ஆட்சியால் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது . மூத்த தலைவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்திய மக்கள் தங்களுடைய அடிப்படை உரிமைகளை கூட இழந்து தவித்தனர். இந்திய அரசியலமைப்பை காங்., கொலை செய்த காலம் அது. இதை அடுத்த தலைமுறைக்கு யாரும் எடுத்து சொல்லும் வகையில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட ஜூன் 25 ஐ கருப்பு தினமாக அனுசரித்து வருகிறோம்.எமர்ஜென்சியின்போது காங்கிரசால் ஆட்சியை இழந்த தி.மு.க., தற்போது அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு அரசியல் அமைப்பை காப்பாற்ற போவதாக பிரசாரம் செய்கிறார்கள். கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய இறப்பை கண்டித்து தமிழக முழுவதும் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஈடுபட்ட கட்சியினர் மீது தி.மு.க., அரசு கடுமையான அடக்கு முறையை கையாண்டது. பல நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்திற்கு செல்லும் முன்பே குண்டு கட்டாக துாக்கி கைது செய்யப்பட்டனர். பெண்களிடம் கூட அடக்குமுறையோடு நடந்து கொண்டனர். ஆனால் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் இதுபோன்ற எந்த அடக்கு முறையும் நடக்கவில்லை. இதிலிருந்தே தெரிகிறது அவர்களுக்குள் உள்ள உறவு பற்றி. பிரதான எதிர்கட்சி என மார்தட்டிக் கொள்ளும் அ.தி.மு.க., விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. தி.மு.க.,வின் பி டீம் தான் அ.தி.மு.க., என்பது தெளிவாக தெரிகிறது. கொடநாடு கொலை வழக்கை கையில் எடுத்ததும் அ.தி.மு.க., அடங்கிவிட்டது. சட்டசபையில் அ.தி.மு.க., வெளி நடப்பு செய்வதெல்லாம் வெறும் நாடகம். தமிழகத்தின் எதிர்கட்சி என்றால் அது பா.ஜ., தான். திண்டுக்கல் மலைக்கோட்டையில் அபிராமி அம்மன் சிலை நிறுவ வேண்டுமென ஹிந்து அமைப்புகள் முன்னெடுத்தால் பா.ஜ., வின் ஆதரவு இருக்கும் என்றார். பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.