உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சேதமான ரோடுகள்; பஸ் வசதிக்காக ஏங்கும் மோர்பட்டி

சேதமான ரோடுகள்; பஸ் வசதிக்காக ஏங்கும் மோர்பட்டி

-வடமதுரை, : சேதமான ரோடுகள், ஆபத்தான ரோட்டோர கிணறுகள், பஸ் வசதி குறைவு போன்ற பிரச்னைகள் மத்தியில் மோர்பட்டி ஊராட்சி மக்கள் பரிதவிக்கின்றனர். நாடுகண்டனுார், ரெட்டியபட்டி, தெப்பகுளத்துபட்டி, மோர்பட்டி, கோப்பம்பட்டி, கொல்லப்பட்டி, ஜி.குரும்பபட்டி, எம்.வி.நாயக்கனுார், பெருமாள்கோவில்பட்டி, மூக்கரபிள்ளையார் கோயில், சமத்துவப்புரம், ஜி.புதுார், சிக்கம்மாள்புரம், ஆர்.புதுார், இந்திரா காலனி, பெருமாள்நாயக்கனுார், பாப்பிநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் தென்னம்பட்டி துவங்கி கோம்பையை இணைக்கும் முக்கிய ரோடு ஜி.குரும்பபட்டி பகுதியில் சேதமுற்று குண்டும் குழியுமாக இருப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர். இதே பகுதியில் ரோடு விளம்பில் தடுப்புச்சுவர் இல்லாத கிணறுகளால் விபத்து அபாயம் உள்ளது. இதே போல கோப்பம்பட்டியில் இருந்து சித்துவார்பட்டி மெயின் ரோட்டை இணைக்கும் ரோடும், ஜி.குரும்பபட்டியை இணைக்கும் ரோடும் சேதமடைந்துள்ளது. மோர்பட்டி தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள சாக்கடை கட்டமைப்புகள் மண் மூடி கிடப்பதால் கழிவு நீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. இங்குள்ள பிரச்னைகளை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கிராம மக்கள் அவதி

எம்.கோபாலகிருஷ்ணன், விவசாயி, ஜி.புதுார்:திண்டுக்கல்லில் இருந்து கொல்லபட்டி வழியே குருந்தம்பட்டிக்கான பஸ் டிரிப் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். திருச்சி திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் கொல்லப்பட்டி பிரிவு பகுதி இரவு நேரத்தில் இருள் சூழந்துள்ளதால் விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. இப்பகுதியில் உயர்மட்ட தெரு விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். இதே போல் ரயில் பாதை இருவழித்தடமாக மாறிய பின்னர் சில நேரங்களில் இங்குள்ள ரயில்வே கேட் அதிக நேரம் மூடியிருக்கும் நிலையில் பல கிராம மக்கள் அவதிபடுகின்றனர். இங்கு ரயில் பாதையை கடக்க பாலம் அமைக்க வேண்டும்.

-தேவை கோபுர விளக்கு

ஜி.ராமசந்திரன், விவசாயி, ஜி.குரும்பபட்டி: ஜி.குரும்பபட்டி மக்கள் இங்குள்ள வரட்டாறு பகுதியில் இருக்கும் மயானத்தையே காலம் காலமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இங்கு செல்ல முறையான பாதை வசதியில்லை. தனியார் விளை நிலங்கள் வழியே ஒற்றையடி பயணத்தில் செல்லும் நிலை உள்ளது. இங்கு முறையான பாதை வசதி அமைக்க வேண்டும். மூக்கரபிள்ளையார்கோயிலுக்கென பஸ் நிறுத்தம் உள்ளது. ஆனால் பயணியர் நிழற்குடை இல்லாததால் மழை, வெயில் நேரங்களில் அதிக சிரமம் ஏற்படுகிறது. மூக்கரபிள்ளையார் கோயில் பகுதியில் நால்ரோடுகள் சந்திக்கும் பகுதி இரவு நேரங்களில் இருள் சூழந்துள்ளது. ரோடும் வளைவாக இருக்கும் நிலையில் வாகனங்களின் முகப்பு விளக்குகளால் ரோட்டை கடக்கும் மக்கள் திக்குமுக்காடும் நிலை உள்ளது. இங்கு கோபுர விளக்கு அமைக்க வேண்டும்.

பஸ்சின்றி - பல கி.மீ., நடை

எஸ்.ராமசாமி, சமூக ஆர்வலர், கோப்பம்பட்டி: திண்டுக்கல் இருந்து வடமதுரை, மோர்பட்டி வழியே கொம்பேரிபட்டிக்கு புதிய வழித்தடத்தில் டவுன் வசதி கோரிக்கை கிடப்பில் இருப்பதால் இப்பகுதி சார்ந்த பள்ளி மாணவர்கள் குறிப்பாக சிறு வயதுடையோர், அதிக வயது மாணவர்களுடன் போட்டியிட்டு அய்யலுார் திசை பஸ்களில் ஏற முடிவதில்லை. இதனால் இவர்களில் பலர் நால்ரோடு சந்திப்பு பகுதியில் வந்து நின்று கொண்டு டூவீலர்களை மறித்து 'லிப்ட்' கேட்டு மோர்பட்டி வரை பயணிக்கின்றனர். இதுபோன்ற சூழலில் மாணவர்களுக்கு விரும்பதகாத சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. டூவீலர்களில் 'லிப்ட்' கிடைக்காத நிலையில் பல கி.மீ., துாரம் விபத்து ஆபத்துடன் நடந்து செல்கின்றனர். மோர்பட்டி, கோப்பம்பட்டி, ஜி.குரும்பபட்டி போன்ற கிராமங்கள் பயன்பெறும் வகையில் மினிபஸ் சேவை ஏற்படுத்த வேண்டும்.

--கிடைக்கும் நிதியில் பணிகள்

டி.சிவசக்தி, ஊராட்சி தலைவர், மோர்பட்டி: கோப்பம்பட்டியில் பத்திர காளியம்மன் கோயில் தெரு, கொல்லப்பட்டி முனியாண்டி கோயில் பகுதிகளில் வண்ணக்கல் பதிப்பு, ஜி.புதுார் பெருமாள் மலைக்கு ரோடு வசதி, குரும்பபட்டி, அண்ணாநகர் பகுதியில் சிமென்ட் ரோடுகள், சமத்துவப்புர வீடுகள் மராமத்து பணிகள், கோப்பம்பட்டி, மோர்பட்டி, மேற்கு தெரு, ரெட்டியபட்டி, பாப்பிநாயக்கன்பட்டி போன்ற இடங்களில் மயானத்திற்கு ரோடு அமைத்துள்ளோம். தெப்பகுளத்துபட்டியில் போர்வெல் அமைக்க உள்ளோம். 2020ல் பதவியேற்ற சில மாதங்களிலே கொரோனா தொற்று பரவல் பிரச்னை ஏற்பட்டதால் வழக்கமான பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு குறைந்து போனது. கிடைக்கும் திட்ட நிதி ஆதாரங்களை கொண்டு அனைத்து பகுதி மக்களுக்கு பாரபட்சமின்றி வளர்ச்சி பணிகளை செய்கிறோம்.

திட்ட பணி குறித்து பட்டியல்

-பி.ஈஸ்வரிபாரதி, ஒன்றிய கவுன்சிலர், பெருமாள்கோவில்பட்டி: கொல்லப்பட்டி சமத்துவப்புரம் மலை கரட்டில் இருப்பதால் அதன் உயரப்பகுதியில் கட்டப்பட்டுள்ள மேல்நிலைத் தொட்டிக்கு நீர் ஏற்ற முடியாத நிலை இருந்தது. இதனால் அங்கு தற்போது புதிதாக தரைமட்ட தொட்டி அமைத்து நீரேற்ற பணிகள் நடக்கிறது. பெருமாள்கோவில்பட்டியில் ஒரு ஆழ்துளை கிணறு, கோப்பம்பட்டியில் தடுப்புச்சுவருடன் சிமென்ட் ரோடு, எம்.வி.நாயக்கனுாரில் கழிவு நீர் வடிகால் கட்டமைப்பு, மோர்பட்டி மேற்கு தெருவில் வண்ணக்கல், கோப்பம்பட்டியில் மெட்டல் ரோடு, குரும்பபட்டி, கொல்லப்பட்டி இந்திரா காலனியில் சிமென்ட் ரோடு, அண்ணா நகரில் சிறுபாலம் என பணிகள் செய்துள்ளோம். ஊராட்சி வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பட்டியல் தயாரித்து ஒன்றிய நிர்வாகத்திடம் தந்துள்ளேன். திட்ட நிதி வரும்போது ஒவ்வொரு பணியாக செய்து தருவதாக தெரிவித்துள்ளனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி