| ADDED : செப் 23, 2011 10:50 PM
திண்டுக்கல் : பிள்ளையார்நத்தம் ஊராட்சி தலைவர் பதவி ஏலம் விடுவதை
தடுக்கவேண்டும் என, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல்
ஒன்றியம் பிள்ளையார்நத்தம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட பலர் ஆர்வமாக
உள்ளனர். இந்நிலையில், ஊர் பிரமுகர்கள் என கூறிக்கொண்டு சிலர், தலைவர்
பதவிக்கு விலை நிர்ணயம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. கிராமத்தினர்
கூறியது:'ஊராட்சி தலைவராக விரும்புபவர்கள் ஐந்து லட்சம் ரூபாயை, கோயில்
கட்டுவதற்காக செலுத்தவேண்டும். எத்தனை பேர் வேண்டுமானாலும் செலுத்தலாம்.
பிரமுகர்கள் முன்னிலையில் குலுக்கல் போடப்படும். இதில் முதல் சீட்டு
எடுக்கும் போது, யார் பெயர் வருகிறதோ, அவர் தலைவர். வேறு யாரும்
வேட்புமனுத்தாக்கல் செய்யகூடாது,' என, சிலர் கூறிவருகின்றனர். இதற்கும்
சிலர், உடன்பட்டுள்ளனர். கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தேர்தல் நடத்தி தலைவரை தேர்வு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் வாக்காளர்
அடையாள அட்டையை கலெக்டரிடம் ஒப்படைப்போம், என்றனர். பிள்ளையார்நத்தம்
ஊராட்சி நிலையை கண்காணித்து, தலைவர் பதவி ஏலம் போவதை தடுக்க, மாவட்ட
நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.