உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒரு மாதமாக குடிநீர் இல்லை

ஒரு மாதமாக குடிநீர் இல்லை

திண்டுக்கல் : சீலப்பாடி ஊராட்சி காந்திஜிநகரில், ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் இல்லாததால், மக்கள் அவதிப்படுகின்றனர். திண்டுக்கல்- திருச்சி ரோட்டில் நகராட்சி எல்லை அருகே காந்திஜிநகர் அமைந்திருந்தாலும், சீலப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. நகராட்சி பகுதியை விரிவாக்கம் செய்வதற்காக ஆய்வு மேற்கொண்டபோது காந்திஜிநகர் பகுதியை திண்டுக்கல் நகராட்சியுடன் இணைக்கும் திட்டமும் இருந்தது. ஆனால் நகராட்சி எல்லைகள் விரிவாக்கம் செய்வது கிடப்பில் போடப்பட்டதால், தொடர்ந்து சீலப்பாடி ஊராட்சிக்குள் இருக்கிறது. காந்திஜிநகர் பகுதி மக்கள் பங்களிப்புடன், மத்திய அரசின் சுஜால்தார திட்டத்தில் மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டது. இதில் நீர் ஏற்றுவதற்கு வழி இல்லை. திண்டுக்கல் நகருக்கு காவிரி குடிநீர் வழங்கும் மெகா தொட்டி, காந்திஜி நகருக்கு அருகே கரூர் ரோட்டில் உள்ளது. இங்கிருந்து தான் நகர் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. காந்திஜி நகர், ஊராட்சி எல்லையில் இருப்பதால் காவிரி நீர் கிடைக்கவில்லை. இந்நிலையில், காந்திஜி நகருக்கு குடிநீர் வினியோகம் செய்து 34 நாட்கள் ஆகிவிட்டது. ஆழ்குழாய் மூலம் கிடைக்கும் தண்ணீர், குடிநீர் அல்லாத பிற உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்தபடுகிறது. இப்பகுதி மக்கள், குடிநீரை விலைக்கு வாங்குகின்றனர். அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, குடிநீர் வினியோகம் செய்யவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !