| ADDED : செப் 21, 2011 10:50 PM
குஜிலியம்பாறை : திண்டுக்கல் மாவட்டம் பாளையம் பேரூராட்சி 12 வது வார்டு கவுன்சிலர் பதவி, 5.06 லட்ச ரூபாய்க்கு பகிரங்கமாக ஏலம் விடப்பட்டது.இங்கு 15 வார்டுகள் உள்ளன. எஸ்.புதூர், சேவகவுண்டன்புதூர், எஸ்.களத்தூர், சாலையூர் கிராமங்கள் அடங்கிய வார்டில், 694 வாக்காளர்கள் உள்ளனர். கவுன்சிலர் பதவி மூலம் கோயிலுக்கு நிதி திரட்ட, எஸ்.புதூர் மந்தையில் நேற்று முன்தினம், பகிரங்க ஏலம் நடந்தது. சுப்பிரமணி என்பவர் 5.05 லட்சத்திற்கு கேட்டார்; இதில், 1000 ரூபாய் அதிகம் கேட்ட சிவக்குமார், 35, தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. முன்பணமாக 50 ஆயிரத்தை செலுத்தி, மீதி தொகையை மனு தாக்கல் அன்று கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டது.ஏலத்தில் பங்கேற்ற சுப்பிரமணி கூறுகையில், ''தொகை அதிகமானதால் நான் விலகி கொண்டேன். இப்பணம் கோயில் கட்டும் பணிக்காக பயன்படுத்தப்படும்,'' என்றார்.தேர்தல் கமிஷன் எச்சரிக்கையையும் மீறி, உள்ளாட்சி பதவிகள் ஏலம் போவது, தொடர் கதையாக உள்ளது.