| ADDED : பிப் 01, 2024 05:21 AM
பழநி : பழநி முருகன் கோயிலில் இன்று எடப்பாடி பக்தர்கள் தங்கி வழிபட உள்ளனர்.இதையொட்டி பருவதராஜகுல மகாஜன சார்பில் கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி நடக்கிறது .பழநி முருகன் கோயில் தைப்பூச விழாவை முன்னிட்டு எடப்பாடி பருவதராஜகுல மகாஜன சமுதாயத்தினர் 300 ஆண்டுக்கு மேலாக பழநிக்கு காவடி எடுத்து வந்து கோயிலில் தங்குகின்றனர்.இந்தாண்டு இன்று தங்க உள்ள நிலையில் அவர்களுக்கான பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. 10 டன் மலை வாழைப்பழங்கள், 50 கிலோ எடை கொண்ட 110 மூடை வெல்லம் , தேன், காவடியில் கொண்டுவரப்படும் பொருட்கள், நெய், கல்கண்டு, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களை சேர்த்து 20 டன்னுக்கு மேல் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட உள்ளது.பழநிகோயில் மட்டுமன்றி அடிவாரம் பகுதியிலும் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்று வரும் எடப்பாடி பக்தர்கள் பழநி முருகருக்கு காவடி, பஞ்சாமிர்தம் செலுத்தி, கோயிலில் பூ கோலமிட்டு படி பூஜை செய்ய பழநி கோயிலில் இன்று இரவு தங்கி வழிபட உள்ளனர்.