உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் காந்தி கிராம பல்கலை பேராசிரியர்கள்
சின்னாளபட்டி: அமெரிக்க பல்கலை பேராசிரியர் குழு வெளியிட்டுள்ள உலகின் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முதல் 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் காந்திகிராம பல்கலையின் நான்கு பேராசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலை பேராசிரியர் ஜான்லொன்னிடிஸ் தலைமையிலான குழுவினர் பல்வேறு நாடுகளை சேர்ந்த நிபுணத்துவம் பெற்ற ஆராய்ச்சியாளர்களை கொண்டு பட்டியல் தயாரித்தனர்.குறைந்தபட்சம் ஐந்து ஆய்வு கட்டுரைகள், புலம், துணை புலம் சார்ந்த சதவீதங்களின் அடிப்படையில் தரவரிசை ஏற்படுத்தப்பட்டது. பட்டியல் வெளியான நிலையில் இதில் உலகம் முழுதும் 2 லட்சத்திற்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.இந்தியாவில், 3,500க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இடம் பெற்றுள்ளனர். இவர்களோடு திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம நிகர் நிலை பல்கலை விஞ்ஞானிகள் பாலசுப்பிரமணியம், மீனாட்சி, மாரிமுத்து, ஆபிரகாம்ஜான் இடம் பெற்றுள்ளனர்.இதில், விஞ்ஞானி பாலசுப்ரமணியம், தெளிவற்ற தர்க்க அணுகுமுறைகளை பயன்படுத்தி தரம் குறைந்த படங்களை உயர்தரமாக மாற்றுதல், கிரிப்டோகிராபி மற்றும் செயலாக்க தொழில்நுட்பம் மூலம் நோயாளியின் மூளையில் ஏற்படும் அதிர்வுகளை கண்டறியும் முறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.விஞ்ஞானி மீனாட்சி, கழிவு நீரில் உள்ள நச்சுத்தன்மை உடைய புளூரைடு, காரியம், குரோமியம், பாதரசம் மற்றும் பிற நச்சுக்களை உறிஞ்சுதல் மூலமாக நீக்கும் முறைகளை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.விஞ்ஞானி மாரிமுத்து, அரிதான பூமியின் தாதுக்களை கொண்டு தயாரிக்கப்படும் கண்ணாடிகள் மூலம் வெள்ளை ஒளி, லேசர் வழி உமிழ்வதற்கான ஆய்வு, அபாயகர கதிர்வீச்சை தடுக்கும் கண்ணாடிகள் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.விஞ்ஞானி ஆபிரகாம்ஜான், சில மாதங்களுக்கு முன் இறந்தார். இவர் நானோ தொழில்நுட்பம் கொண்டு உயிர் வேதியியல் காரணிகளை கண்டறியும் உணர்விகளை அமைப்பதில் கவனம் செலுத்தி வந்தார். இவை சிறந்த செயல்பாடு, மலிவு விலையில் உள்ளவையாகும்.விஞ்ஞானி ஆபிரகாம்ஜான் தவிர்த்து மற்ற மூவரும் 2019, 2020, 2021, 2022ல் வெளியான உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பெற்றிருந்த நிலையில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக தேர்வாகி உள்ளனர்.