கன்னிவாடி: ஆத்துார் தொகுதியில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ்கள் இயக்கத்தில் ஊழியர்களின் தன்னிச்சையான நடவடிக்கைகளால் இரவு நேர கிராமங்களுக்கான சேவை கடுமையாக பாதிப்படைகிறது. நடுவழியில் இறக்கிவிடும் பிரச்னையால் மகளிர், கூலித்தொழிலாளிகள் உள்ளிட்ட பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.ஆத்துார் தொகுதிக்குட்பட்ட கிராமங்களுக்கு ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் யூனிட் 2, யூனிட் 3 ஆகிய டெப்போக்களில் இருந்து அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகின்றன. விவசாய தொழிலை அடிப்படையாகக் கொண்ட கிராமங்களில் அரசு டவுன் பஸ் சேவையே முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள கூலித்தொழிலாளர்கள், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், வத்தலகுண்டு, சின்னாளபட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கு செல்வதற்காக அரசு டவுன் பஸ் சேவையை நம்பி உள்ளனர் இருப்பினும் பஸ்களை இயக்குவதில் அதிகாரிகள் அலட்சியத்தால் அடிக்கடி ட்ரிப் -கட் செய்யப்படும் நிலை தொடர்கிறது. புறநகர் பஸ் வசதி உள்ள மெயின் ரோட்டில் செல்லும் டவுன் பஸ்களை விட கிராமங்களுக்கு செல்லும் பஸ்களின் இயக்கத்தை முடக்குகின்றனர் சிறப்பு பஸ்களின் இயக்கத்திற்காக கிராம பஸ்களை மாற்றி அனுப்புகின்றனர்.அதிகாரிகள் அலட்சியம் மட்டுமின்றி ஊழியர்களின் தன்னிச்சையான செயல்பாடுகளால் மகளிர், கூலித்தொழிலாளர்கள், முதியோர் பாதி வழியில் இறக்கி விடப்படும் அவல நிலையும் தொடர்கிறது. வழக்கமான வழித்தடங்களை தவிர்த்து மாற்று வழித்தடங்களை ஊழியர்கள் பயன்படுத்துவது, இரவு நேரத்தில் கடைசி டிரிப்களில் பஸ் ஸ்டாண்ட் செல்வதை தவிர்த்து டெப்போக்களுக்கு நேரடியாக கொண்டு செல்வது, இதற்காக பயணிகளை ஏற்ற மறுத்து திண்டுக்கல் பைபாஸ் பகுதிகளில் இறக்கி விடுவது, பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ்களின் இயக்கத்தை நிர்வகிக்கும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவது போன்ற புகார்களும் நீடிக்கிறது.இந்த பிரச்சனைகளால் ரெட்டியார்சத்திரம், ஆத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.மாவட்ட நிர்வாகம் அரசு டவுன் பஸ்கள் இயக்கத்தில் நிலவும் குளறுபடிகளை நீக்கி தடையற்ற சேவையை கிராமங்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். மாணவர்கள் அவதி
சஞ்சீவி ,தனியார் நிறுவன ஊழியர், குட்டத்துப்பட்டி : திண்டுக்கல்லில் இருந்து கன்னிவாடிக்கு, கரிசல்பட்டி, கசவனம்பட்டி, கோனுார், மைலாப்பூர், மாங்ஙரை, எம்.அம்மாபட்டி, ரெட்டியார்சத்திரம், முத்துராம்பட்டி உட்பட 5க்கு மேற்பட்ட வழித் தடங்களில் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை, சமீபகாலமாக சரிவர இயக்கப்படுவதில்லை. பல டிரிப் நேரங்களுக்கான பஸ்களை நிறுத்தி விடுகின்றனர். பேட்ஜ் ஊழியர்களை வேறு பஸ்கள் , பணிக்கு அனுப்புகின்றனர். சிகிச்சை பெற புறப்படும் நோயாளிகள், தேர்வுக்கு புறப்படுவோர், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பஸ் சேவையை முன்னறிவிப்பின்றி நிறுத்துவதால் பாதிப்படைகின்றனர். தடம் மாறிய பயணம்
மருதை, கூலித்தொழிலாளி, கசவனம்பட்டி :அதிகாரிகளின் போதிய கண்காணிப்பு இல்லாததால் அரசு பஸ்கள் இயக்கத்தில் அடிக்கடி முன்னறிவிப்பின்றி தடை ஏற்படுத்துகின்றனர். திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து தனியார் பஸ்கள் வழக்கம் போல் வடக்கு ரத வீதி, மேற்கு தாலுகா அலுவலகம், கோட்டை மாரியம்மன் கோயில் வழியாக இயங்குகின்றன. இப்பகுதியை சேர்ந்த நுாற்றுக்கணக்கான கூலித்தொழிலாளர்கள் பயன்பெறுவர். ஆனால் தருமத்துப்பட்டி, கசவனம்பட்டி, கன்னிவாடி வழித்தட அரசு டவுன் பஸ்கள் மட்டும் டிரைவர் கண்டக்டர் விருப்பத்திற்கேற்ப தொடர்பில்லாத நாகல்நகர் தடத்தில் செல்கின்றன. ---மகளிர் டிக்கெட்டில் முறைகேடு
ம.கண்ணன், சமூக ஆர்வலர், எஸ்.பாறைப்பட்டி: சின்னாளப்பட்டி வழியே செல்லும் அரசு டவுன் பஸ்கள் பல நேரங்களில் சுற்றுப்புற கிராமங்களை தவிர்த்து சின்னாளபட்டியுடன் திண்டுக்கல் திரும்பி செல்கின்றன. திண்டுக்கல் கொடைரோடு இடையேயான அரசு டவுன் பஸ்களின் எண்ணிக்கையையும் சில மாதங்களாக குறைத்து விட்டனர். ஆத்துார், கும்மம்பட்டி, அக்கரைப்பட்டி, மல்லையாபுரம், நீலமலைக்கோட்டை, திருமலைராயபுரம், தருமத்துப்பட்டி வேலக்கவுண்டன்பட்டி, சித்தையன்கோட்டை, ஒட்டுப்பட்டி போன்ற கிராமங்களுக்கான இரவு நேர கடைசி பஸ் சேவை நிச்சயமற்றதாக மாறி விட்டது. மகளிர் இலவச பயணத்திற்கான அரசு சார்பில் வழங்கப்படும் மானிய தொகையை ஊழியர்கள் தவறாக பயன்படுத்துகின்றனர்.