| ADDED : ஜன 20, 2024 01:31 AM
வடமதுரை:''தமிழ்நாடு ஊராட்சி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (கோப்ஸ்) சார்பில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.2ல் சென்னையில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தப்படுவதாக,'' ஊராட்சி செயலாளர் சங்க மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணி தெரிவித்தார்.திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் அவர் கூறியதாவது: 40 ஆண்டுகளுக்கு மேலாக ரூ.4000 தொகுப்பூதியத்தில் பணிபுரியும் குடிநீர் தொட்டி இயக்குபவர்களை தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியபடி காலமுறை ஊதியம், அவர்களுக்கு பணிக்கொடை ரூ.ஒரு லட்சம், ஓய்வூதியமாக ரூ.5000 கருவூலம் மூலம் வழங்க வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் மாத ஊதியம், ஓய்வூதியம் ரூ.10,000, விடுப்பு விதிகள் அனுமதிக்க வேண்டும். துாய்மை காவலர்களுக்கு மாதாந்திர ஊதியத்தை ரூ.10, 000 ஆக ஊராட்சி நேரடியாக வழங்க வேண்டும்.ஊராட்சி செயலர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கவுன்சிலிங் முறையில் வட்டாரத்திற்குள் பணி மாறுதல் வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் பணியாற்றிய துாய்மை காவலர்கள், துாய்மை பணியாளர்கள் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட முன் கள பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ஊக்கத்தொகை ரூ.15,000யை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளுக்காக இந்த போராட்டம் நடக்கிறது. மாநிலம் முழுவதும் ஊராட்சிகளில் பணிபுரியும் செயலாளர்கள், மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் பங்கேற்கின்றனர் என்றார்.