உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உள்ளாட்சி பணிகளில் கட்சி நிர்வாகிகள், ஒப்பந்ததாரர்கள் ஆதிக்கபோக்கு! அலுவலகத்தை ஆக்கிரமித்து முகாமிடுவதால் முகம் சுளிப்பு

உள்ளாட்சி பணிகளில் கட்சி நிர்வாகிகள், ஒப்பந்ததாரர்கள் ஆதிக்கபோக்கு! அலுவலகத்தை ஆக்கிரமித்து முகாமிடுவதால் முகம் சுளிப்பு

சின்னாளபட்டி : திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல ஊராட்சி ஒன்றிய, பேரூராட்சி அலுவலகங்களில் கட்சி நிர்வாகிகள், ஒப்பந்ததாரர்கள் எந்த நேரமும் ஆக்கிரமித்து முகாமிட்டு உள்ளனர். இதனால் அலுவலகப் பணிகளில்பாதிப்பு, மகளிர் ஊழியர்கள் அவதி என பொது மக்களும் முகம் சுளிக்கும் நிலை நீடிக்கிறது.மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்கள், 23 பேரூராட்சிகள் உள்ளன. அனைத்து அமைப்புகளிலும் உள்ளாட்சி பிரதிநிதிகளாக அரசியல் கட்சி சார்ந்த நபர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதனால் ஒன்றியங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ,பேரூராட்சிகளில் செயல் அலுவலர்கள் என நிர்வாக ரீதியிலான அதிகாரிகள் வருகை பெயர் அளவில் மட்டுமே உள்ளது. பெரும்பாலான இடங்களில் கலெக்டர் அலுவலகம், உதவி இயக்குனர் அலுவலகம், வீடியோ கான்பரன்சிங், கலந்தாய்வு கூட்டம், வெளி மாவட்ட பயிற்சி போன்ற காரணங்களை கூறி அலுவலர்கள் வருகையை தவிர்த்து வருகின்றனர். ஆனால் சம்பந்தப்பட்ட இடங்களில் அப்பகுதியைச் சார்ந்த கட்சி நிர்வாகிகள் ஒப்பந்ததாரர்களின் ஆக்கிரமிப்பிற்கு குறைவில்லை.எந்த நேரமும் அலுவலக முன் புறம், அறைகள் போன்றவற்றில் அமர்ந்து ஊராட்சி நிர்வாகத்திற்கு தொடர்பு இல்லாத பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பொறியியல் துறை கணினி அறை உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலும் மகளிர் ஊழியர்கள் பணியில் உள்ளனர். இருப்பினும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் கட்சி நிர்வாகிகள் ,ஒப்பந்ததாரர்கள் போன்றோர் எந்த நேரமும் ஆக்கிரமித்து உள்ளனர்.அரசியல் பிரமுகர்களின் ஆதிக்கம் காரணமாக ,பிற கட்சி நிர்வாகிகள் ,பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்த போதும் தவிர்க்க வேண்டிய சூழல் உள்ளது. இந்த பிரச்னையால் நலத்திட்ட, நிர்வாக பணிகளை மேற்கொள்வதில் சிரமம் உள்ளதாக பணியாளர்கள் புலம்புகின்றனர்.

ஆட்சியாளர்களுக்கே அவப்பெயர்

உள்ளாட்சி மகளிர் பிரதிநிதிகளின் ஜனநாயக உரிமைகள், பதவி அதிகாரம் அனைத்தையும் கணவர், உறவினர் போன்று கட்சி நிர்வாகிகளும் பறித்து அதிகாரம் காட்டி வருகின்றனர். இவ்வாறு நடந்தால் சர்வாதிகாரி போல் நடவடிக்கை எடுப்பேன் என முதல்வர் எச்சரித்த போதும் ஆளுங்கட்சியினர் யாரும் பொருட்படுத்தவில்லை. எந்த நேரமும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் தலைமை பொறுப்பில் இருக்கும் நபர்களின் அறை, நிர்வாக அதிகாரிகளின் அறைகளில் கட்சி நிர்வாகிகள் ஆக்கிரமித்து அமர்ந்துள்ளனர். வெகுநேரம் காத்திருந்து உள்ளாட்சி வார்டு உறுப்பினர்களும், பொதுமக்களும் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. ஒவ்வொரு பணியிலும் தலையிட்டு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடுதல், தங்களின் அனுமதியின்றி எந்த வேலையையும் செய்யக்கூடாது மீறினால் மாற்றி விடுவோம் என மிரட்டும் செயல்களும் அரங்கேறி வருகிறது. ரோடு, கட்டட பணிகளில் அகற்றப்படும் மண், மரங்களை உரிய வழிமுறைகளை கையாளாமல் விற்கின்றனர். இடைத்தரகர் பணியில் ஈடுபடும் கரைவேட்டி கட்டியவர்களின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. அதிகாரிகள் செய்வதறியாது திகைக்கின்றனர். இது போன்ற நபர்களின் நடமாட்டத்தால் சம்பந்தப்பட்ட பகுதி எம்.எல்.ஏ., அமைச்சர், ஆட்சியாளர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருகின்றனர். இப்பிரச்னை தி.மு.க.,விற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என அக்கட்சியினரே புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.பி.எஸ்.சேகர், சமூக ஆர்வலர், சின்னாளபட்டி........


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை