| ADDED : நவ 22, 2025 03:42 AM
சின்னாளபட்டி: அரைக்குறையாக நடந்த ரோடு சீரமைப்பு, ஆக்கிரமிப்புகள், அள்ளப்படாத சாக்கடை கழிவு பிரச்னைகளால் சின்னாளபட்டியில் அவதி நீடிக்கிறது. சின்னாளபட்டி பேரூராட்சியில் மெயின் ரோடு விரிவாக்கம் நெடுஞ்சாலை துறை சார்பில் சில மாதங்களுக்கு முன் நடந்தது. ரோட்டோர சாக்கடை புதுப்பித்த போதும் தெருக்களில் இருந்து வரும் அசுத்த நீர் வெளியேறும வகையில் கட்டமைப்பு ஏற்படுத்தவில்லை. பல இடங்களில் மேடு, பள்ளங்களால் அசுத்தநீர் தேங்குகிறது. பேரூராட்சி சார்பில் சமீபத்தில் நடந்த பேவர் பிளாக் ரோடு பணியிலும் அதிகாரிகள் அலட்சியத்தால் முறைகேடு புகார்கள் உள்ளன. பொம்மையசுவாமி கோயில் தெருவில், பராமரிப்பற்ற வடிகாலில் கழிவுகள் மேவி உள்ளது. அவ்வப்போது செப்டிக் டேங்க் கழிவுநீர் மழைநீருடன் கலந்து தாழ்வான குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கிறது. தேவாங்கர் பள்ளி மெயின் ரோட்டில் தேங்கும் அசுத்த நீரால் வாகனங்கள், பாதசாரிகள் கடந்து செல்ல முடியவில்லை. 5, 6, 11, 12, 14 வார்டுகளை இணைக்கும் முக்கிய சாலையாக இந்த ரோடு உள்ளது .உழவர் சந்தை குறுக்கு சாலையில் துவங்கி தேவாங்கர் பள்ளி வரை பல இடங்களில் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. சாரல் மழை காலங்களிலும் மழை நீர் வெளியேற வழி இன்றி அசுத்த நீருடன் தேங்குகிறது 11 வது வார்டு தென்புதுார் பகுதியில் 2 ரேஷன் கடைகள் உள்ளன.ரோடு மோசமாக இருப்பதால் ரேஷன் பொருட்கள் வாங்க வரும் முதியோர்,பெண்கள் மழை நீர் ரோட்டில் உள்ள சகதியில் தடுமாறி விழுந்து பாதிப்படையும் அவலம் தொடர்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீடிக்கும் அவதி வி.கே.முருகன், மார்க்சிஸ்ட் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர், சின்னாளபட்டி : வணிகத்தில் அதிக முக்கியத்துவம் பெற்ற சின்னாளபட்டிக்கு தினமும் நுாற்றுக்கணக்கான வெளியூர் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் ஊராட்சிகளில் உள்ள அடிப்படை கட்டமைப்பு வசதிகள், பராமரிப்பு கூட பேரூராட்சி பகுதியில் இல்லை. தெருக்கள் தோறும் பல இடங்களில் கழிவுநீர் குட்டைகளாக காட்சியளிக்கின்றன. கண்காணிப்பு இல்லை எம்.ஆர்.திருநாவுக்கரசு,பா.ஜ., நெசவாளர் பிரிவு மாவட்ட செயலாளர், சின்னாளபட்டி : பொம்மையசுவாமி கோயில் ரோட்டில் நடந்த சீரமைப்பு பணிகளில் போதிய கண்காணிப்பு இல்லை. கழிவுகள், மண் மேவிய நிலையில் அசுத்த நீர் தேங்குகிறது. சாரல் மழை நேரத்தில் கூட ரோடு முழுவதும் அசுத்த நீர் பரவி உள்ளதால் பாதசாரிகள், டூவீலர்களில் செல்வோர் பாதிக்கின்றனர். சாக்கடை அடைப்பு ஏற்பட்டு வீடுகளில் அசுத்த நீர் புகுகிறது.