| ADDED : பிப் 25, 2024 05:34 AM
திண்டுக்கல் : ''அச்சம் என்பது அடிமை சாசனம், அதை உடைத்தெறியுங்கள்.அச்சம் தவிர்த்தவர்களே வெற்றி பெற்றிருக்கிறார்கள்,'' என இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.திண்டுக்கல் ஜி.டி.என். கலைக்கல்லுாரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் இளங்கலை 1118, முதுகலை 164 என 1282 மாணவர்களுக்கான பட்டங்கள் வழங்கிய அவர் பேசியதாவது : பெய்கின்ற மழையின் துளியானது முத்தாக, மணியாக, மரமாக, குடிநீராக, நதியாக மாறிவிடுகிறது. மழைத்துளி அது சேரும் இடத்தைப் பொறுத்து மாறுபடுகிறது. விரும்பிய உடை, விரும்பிய வாழ்க்கை என விரும்பியது கிடைத்தவர்கள் மட்டும் வெற்றியாளர்கள் இல்லை. கிடைத்த வாழ்க்கையை விரும்பியவர்களும் வெற்றியாளர்கள்தான். அரசுப் பள்ளியில் படித்த எனக்கு இஸ்ரோவில் பணி வாய்ப்புக் கிடைத்தது. ஐ.நா. சபையில் 87 நாடுகளுக்கான அறிவியல் மாநாட்டில் தலைமை தாங்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதற்கெல்லாம் காரணம் அச்சத்தை அகற்றியதுதான். வறுமை, ஆங்கிலம் போன்றவற்றின் மீதான அச்சத்தைத் தவிருங்கள். விரும்பிய பணி கிடைக்கவில்லையே எனும் அச்சத்தைத் தவிர்த்து கிடைத்த பணியை விரும்பி செய்யுங்கள். அச்சம் என்பது அடிமை சாசனம், அதை உடைத்தெறியுங்கள்.அச்சம் தவிர்த்தவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றார்.கல்லுாரி தாளாளர் ரெத்தினம் தலைமை வகித்தார். முதல்வர் பாலகுருசாமி வரவேற்றார்.கல்லுாரி இயக்குநர் துரை ரெத்தினம், அறங்காவலர் நாராயணராஜீ, இயக்குநர் மார்க்கண்டேயன், துணை முதல்வர்கள் சகுந்தலா, நடராஜன், பதிவாளர் சின்னக்காளை, ஆலோசகர் ராமசாமி, ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் மதிவாணன். தேர்வு அலுவலர் சீனிவாசன், டீன்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.