ஒட்டன்சத்திரம் : கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை, நாய்களால் தொல்லை என ஒட்டன்சத்திரம் 15 வது வார்டில் பிரச்சனைகள் உள்ளன.காளியம்மன் கோயில் மேற்கு, சாஸ்தா நகர் பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் விரிவாக்க பகுதிகள் அதிகரித்து வருகிறது. சாஸ்தா நகர் ஐயப்பன் கோயில் தெற்குப் பகுதியில் செல்லும் கழிவு நீர் ஓடையில் புல் பூண்டுகள் முளைத்துள்ளது. இதனால் கழிவு நீர் தேங்கி சுகாதாரம் பாதிக்கிறது.நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. விரிவாக்கப் பகுதிகளில் தெருவிளக்குகள், ரோடுகள் அமைக்க வேண்டும். ரயில்வே ஸ்டேஷன் கிழக்கு, மேற்குப் பகுதியில் உள்ள சப்வேயை மழைக்காலத்தில் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது. சப்வேயில் மழைநீர் தேங்காமல் இருக்க நடக்கும் கூரை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். காலியிடங்களில் குப்பையை கொட்டி தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. துார்வாரப்படாத ஓடை
சாய்.ஏ.மணிகண்டன், பா.ஜ.,நகர செயலாளர்: சாஸ்தா நகர் ஐயப்ப சுவாமி கோயில் தெற்கே செல்லும் கழிவுநீர் ஓடையில் செடிகள் புல் பூண்டுகள் முளைத்து ஓடையை மறைத்துள்ளது. இந்த ஓடை அடிக்கடி துார்வாரப்படாமல் இருப்பதால் கொசுத்தொல்லை உள்ளது. செடி கொடிகளை அகற்றி துார்வாரி சுத்தம் செய்ய வேண்டும். விரிவாக்க பகுதிகளில் கூடுதல் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும். கழிவுநீர் தேக்கம்
சிவமணி, மார்க்சிஸ்ட், ஒன்றிய செயலாளர்: சப்வேயில் தண்ணீர் தேங்காமல் இருக்க பணிகள் நடந்து வருகிறது. கழிவு நீர் கால்வாயை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். குடிநீர் பிரச்னை இல்லை. சில இடங்களில் குப்பையை தீ வைத்து எரிக்கின்றனர். போர்வெல் தண்ணீரை அனைத்து பகுதிகளுக்கும் தினமும் விநியோகம் செய்ய வேண்டும். கோரிக்கைகள் நிறைவேற்றம்
ஜெயமணி, கவுன்சிலர் (தி.மு.க.,): வார்டு மக்கள் ரேஷன் பொருட்களை வாங்க 3 வார்டுகளுக்கு சென்று சிரமப்பட்டு வந்தனர். அமைச்சர் சக்கரபாணியிடம் கோரிக்கை வைத்ததால் பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளது. ரயில்வே சுரங்க பாதையில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு கூரை அமைக்கப்பட்டு வருகிறது.துாய்மை பணியாளர்கள் வீடு தோறும் குப்பையை வாங்குகின்றனர். அவர்கள் வந்து சென்ற பின்பு சிலர் காலியிடங்களில் குப்பையை கொட்டி எரிக்கின்றனர். ரோடு இரு பக்கங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது என்றார்.