ஒட்டன்சத்திரம் : மலை அடிவாரம் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானைகள், நிற்காமல் செல்லும் வெளியூர் பஸ்கள் என சிந்தலவாடம்பட்டி ஊராட்சியில் தீர்க்க வேண்டிய பிரச்னைகள் ஏராளம் உள்ளது.ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள இந்த ஊராட்சியில் சிந்தலவாடம்பட்டி, ராமபட்டிணம்புதுார் கிராமங்களை உள்ளடக்கிய இங்கு தேவையான இடங்களில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டும், புதிதாக குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஊராட்சியில் தற்போது குடிநீர் பிரச்னை இல்லை. புதிதாக பல ரோடுகள் போடப்பட்டுள்ள நிலையில் இன்னும் பல இடங்களில் இணைப்புச் சாலைகள் அமைக்கப்பட வேண்டியுள்ளது. சிந்தலவாடம்பட்டியில் புதிய துணை ஆரம்ப சுகாதார நிலையம், ராமபட்டணம்புதுார் மலையடிவாரத்தில் மினி டேம் அமைப்பது என்பது இந்த ஊராட்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை உள்ளது. விளைநிலங்களில் யானைகள்
மாரிமுத்து, விவசாயி:ராமபட்டிணம்புதூர் மலை அடிவாரப் பகுதியில் உள்ள விவசாய விளைநிலங்களில் அடிக்கடி காட்டு யானைகள் நுழைந்து மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இப்பகுதியில் தொங்கும் சோலார் விளக்குகள் அமைத்து விளைநிலங்களுக்குள் யானைகள் நுழைவதை கட்டுப்படுத்த வேண்டும். யானைகளால் உயிரிழப்பு சம்பவங்களும் நடக்கிறது. வெளியூர் பஸ்கள் நிற்பதில்லை
ஜி.ராமசாமி, முன்னாள் கூட்டுறவு சங்க உறுப்பினர்: மாட்டுப் பாதையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் பஸ்களில் சென்று வருகின்றனர். இங்கு உள்ளூர் பகுதிகளுக்கு செல்லும் டவுன் பஸ்கள் மட்டுமே நின்று செல்கின்றன. திருச்சி, திண்டுக்கல், மதுரை செல்லும் பஸ்கள் நிற்பதில்லை. இதனால் மேற்கண்ட நகரங்களுக்கு செல்வதற்கு சத்திரப்பட்டி , பழநி சென்று பஸ் ஏற வேண்டி உள்ளது. பஸ் நிறுத்தத்தில் இருந்து மேற்கண்ட நகரங்களுக்குச் செல்லும் வகையில் வெளியூர் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் பிரச்னை இல்லை
கருப்புசாமி, வார்டு உறுப்பினர்: சிந்தலவாடம்பட்டி புது காலனி முதல் மாட்டுப் பாதை வரை புதிதாக குழாய்கள் அமைக்கப்பட்டு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சுகாதார வளாகம் அருகே புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. சிந்தலவாடம்பட்டி ஆண்கள், பெண்கள் சமுதாய சுகாதார வளாகம் ரூ.10. 50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தடுப்பணைகளும் அமைக்கப்பட்டுள்ளது. தேவை கதிர் அடிக்கும் களம்
ராமசாமி, வார்டு உறுப்பினர்: ராமபட்டிணம்புதுார் ஆத்திமரத்தான் கோயில் அருகில் தடுப்பணை ரூ.5.4 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் பல இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. அடிவாரப் பகுதியில் யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். விளைபொருட்களை பிரித்தெடுக்க வசதியாக கதிர் அடிக்கும் களம் அமைக்க வேண்டும். அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை
கே. பன்னீர்செல்வன், ஊராட்சி தலைவர்:சிந்தலவாடம்பட்டி ஊராட்சியில் குடிநீர், சாக்கடை, ரோடு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிறைவேற்றி வருகிறோம். அமைச்சர் சக்கரபாணியிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. குறுக்குப் பாதை முதல் மலை அடிவாரம் வரை ரூ. 7.2 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.5 லட்சத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழு கட்டடம் முதல் சேவை மையக் கட்டடம் வரை சாக்கடையாக அமைக்கப்பட்டுள்ளது. ராமபட்டிணம்புதுார் முதல் ஆத்திமரத்தான் கோயில் வரை ரூ.59.83 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டுள்ளது. அனைத்து தெருக்கள் சந்திப்பில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் பேவர் பிளாக் தளம் சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.