ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி, சிவகிரி, அந்தியூர் மற்றும் திருப்பூர், நாமக்கல், சேலம், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மரவள்ளிக்கிழங்கு அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. ஜூலையில் ஒரு டன் மரவள்ளி, 10,500 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது, 7,500 ரூபாயாக விலை குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சியை தடுத்து, உரிய விலை நிர்ணயிக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து தமிழ்நாடு சிறு குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு கூறியதாவது:மரவள்ளிக்கிழங்கு விலை வீழ்ச்சி விவசாயிகளை பாதிப்படைய செய்துள்ளது. வரும் அக்டோபர் முதல் அறுவடை துவங்க உள்ளதால் விலை வீழ்ச்சி மேலும் பாதிப்பை உருவாக்கும். நடவின்போது போதிய மழை இல்லாமலும், அதிக வெப்பநிலையாலும், உற்பத்தி செலவு ஒரு ஏக்கருக்கு, 90 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை ஆனது. ஏக்கருக்கு சராசரியாக, 9 முதல், 11 டன் வரை மட்டுமே மகசூல் கிடைக்கும். இந்த விலை குறைவு நீடித்தால் ஒரு ஏக்கருக்கு விவசாயிகளுக்கு, 25 ஆயிரம் ரூபாய் முதல், 35 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்படும்.எனவே மத்திய, மாநில அரசுகள் ஏற்றுமதியை ஊக்குவித்து ஒரு டன்னுக்கு, 11 ஆயிரம் ரூபாய் என விலை நிர்ணயிக்க வேண்டும். மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாராகும் ஜவ்வரிசி, 90 கிலோ, 4,௦௦௦ ரூபாய் முதல், 4,500 ரூபாய்; ஸ்டார்ச் மாவு, 3,௦௦௦ ரூபாய் வரை விற்பனையாகிறது. அரசு விலை வீழ்ச்சியை தடுத்து உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.