| ADDED : ஆக 13, 2024 05:54 AM
புன்செய் புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி நகராட்சி மக்களுக்கு, பவானிசாகர் அணையிலிருந்து இரு குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக, 16 கி.மீ., மாநில நெடுஞ்சாலை வழியாக பிரதான குழாய் பதிக்கப்பட்டுள்ளது. முதலாம் குடிநீர் திட்டத்தில் குழாய் பதித்து, நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. இதனால் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவது வாடிக்கையாகி விட்டது.பவானிசாகர்--புன்செய்புளியம்பட்டி சாலையில், பனையம்பள்ளி மற்றும் கோடேபாளையம் என இரு இடங்களில் பிரதான குழாயில் நேற்று உடைப்பு ஏற்பட்டு, சாலையை பிளந்து தண்ணீர் பீறிட்டது. நகராட்சி பணியாளர்கள் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.இதுகுறித்து மக்கள் கூறியதாவது:நகராட்சியில் நான்கு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வருகிறது. மெயின் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால், பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகிறது. பனையம்பள்ளி, நால்ரோடு ஆகிய பகுதிகளில் இரண்டு மாதத்தில் மூன்று முறை பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு குழாய் மாற்றப்பட்டது. உடைப்பு ஏற்படும் பகுதிகளில் தரமற்ற குழாய் பதிக்கப்படுவதால் மீண்டும் மீண்டும் உடைப்பு ஏற்படுகிறது. நகராட்சியில் மற்ற திட்டப்பணிகளை விட குடிநீர் பராமரிப்புக்ககுத்தான் அதிக நிதி செலவிடப்படுகிறது. அப்படியிருந்தும் குடிநீர் வீணாவதை முடிவுக்கு கொண்டுவர முடிவதில்லை. குழாய்கள் பதிக்கும் பணியை கமிஷனர் கண்காணித்தாலே இந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். இவ்வாறு கூறினர்.