ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் ஒவ்வொரு மாதமும் மாமன்ற கூட்டம் நடத்தப்படுகிறது. அதேபோல், ஒவ்வொரு வார்டிலும் மக்களின் குறைகளை அறிய, பகுதி சபை கூட்டம் நடத்த கோரிக்கை எழுந்தது. இதன்படி நான்கு மண்டலங்களிலும் மாதந்தோறும் ஒரு வார்டு தேர்வு செய்து, பகுதி சபை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதன்படி இரண்டாவது மண்டலத்துக்கு உட்பட்ட, 35வது வார்டில் கவுன்சிலர் புவனேஸ்வரி பாலசுந்தரம் தலைமையில், பகுதி சபை கூட்டம் நேற்று நடந்தது. மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், இரண்டாம் மண்டல தலைவர் சுப்பிரமணியம் பங்கேற்றனர்.இதில் சொத்து வரி, குடிநீர் வரி, வரி பெயர் மாற்றம், தொழில் வரி, பாதாள சாக்கடை இணைப்பு, கட்டிட அனுமதி, சாலை வசதி, தெரு விளக்கு, சாக்கடை வசதி தொடர்பாக பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்று, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.இதேபோல் முதலாவது மண்டலத்துக்கு உட்பட்ட ஆறாவது வார்டில், கவுன்சிலர் தமிழ்பிரியன் தலைமையில் பகுதி சபை கூட்டம் நடந்தது. முதலாம் மண்டல தலைவர் பழனிசாமி, உதவி ஆணையர் அண்ணாதுரை முன்னிலை வகித்து, மக்களிடம் மனுக்களை பெற்றனர். மூன்றாவது மண்டலத்தில், 50வது வார்டில் கவுன்சிலரும், மேயருமான நாகரத்தினம் தலைமையிலும், நான்காம் மண்டலம், 55வது வார்டில், கவுன்சிலர் சுபலட்சுமி தலைமையிலும் பகுதி சபை கூட்டம் நடந்தது.