கொடுமுடி,ஆடிப்பெருக்கு தினமான நேற்று, காவிரி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால், கொடுமுடி மற்றும் கூடுதுறையில், 'ஷவரில்' குளித்து பக்தர்கள் கோவிலில் வழிபட்டு சென்றனர்.ஆடிப்பெருக்கு தினமான நேற்று, காவிரி கரையோர பகுதிகள் மற்றும் கோவிலுக்கு மக்கள் படையெடுத்தனர். ஆனால் காவிரி ஆற்றில், ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்வதால், பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. அதேசமயம் பக்தர்கள் குளிக்க வசதியாக, கரையோர பகுதிகளில் 'ஷவர்' வசதி செய்யப்பட்டிருந்தது. கொடுமுடிக்கு வந்த ஆயிரக்கணக்கான மக்கள், திருமண தடை மற்றும் தோஷ நிவர்த்தி உள்ளிட்ட வழிபாடுகளில் ஈடுபட்டு புனித நீராடினர். பின் மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். புதுமண தம்பதியர் புனித நீராடி இறைவனை வழிபட்டனர். காவிரி தாய்க்கு முளைப்பாறி மற்றும் கனிகள் வைத்து வழிபட்டு, புது மஞ்சள் கயிறு மாற்றிக்கொண்டனர். பேரூராட்சி சார்பில் காவிரி நதி நீரில் குளிப்பதற்கு வசதியாக, ஷவர் வசதி செய்யப்பட்டிருந்தது. மகுடேஸ்வரர் கோவிலில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், பொது தரிசனம், சிறப்பு தரிசனத்துக்கு தனித்தனியே தடுப்பு அமைக்கப்பட்டது. மகுடேஸ்வரர் கோவிலில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் பூஜை நடந்தது.வெறிச்சோடிய கூடுதுறை பவானி கூடுதுறையில் நேற்று காவிரி ஆற்றில், ௧.௭௦ லட்சம் கன அடி உபரி நீர் சென்றது. கூடுதுறை படித்துறை மூழ்கி, பரிகார மண்டபத்தை தொட்டு வெள்ள நீர் பாய்ந்தோடியது. வெள்ளப்பெருக்கால் கூடுதுறையில் குளிக்க இறங்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பக்தர்களின் கூட்டம் மிகவும் குறைவாக காணப்பட்டது. அதேசமயம் பக்தர்கள் நீராட வசதியாக, ஆற்றிலிருந்து மோட்டார் மூலம் தண்ணீர் கொண்டு வந்து, 'ஷவர்களில்' நீராட வசதி செய்யப்பட்டிருந்தது. இதில் குளித்த பலர், சுவாமியை வழிபட்டு சென்றனர். முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க அமைக்கப்பட்ட பரிகார மண்டபங்கள், மக்கள் கூட்டமின்றி களையிழந்து காணப்பட்டது. சொற்ப எண்ணிக்கையிலான புதுமண தம்பதியர் வழிபாடு செய்து, புதுத்தாலி மாற்றிக் கொண்டனர். திருமணம் கைகூடாத இளம்பெண்கள், வாலிபர்கள், பெற்றோர் முன்னிலையில், சப்த கன்னிமார் வழிபாடு செய்து, கைகளில் மஞ்சள் கயிறுகளை கட்டிக் கொண்டனர். வழக்கமாக, ஆடி 18 நாளில் பவானி கூடுதுறையில், ௫௦ ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புனித நீராடுவர். நடப்பாண்டு வெள்ளம் கரைபுரண்டு சென்றதால் குளிக்க விதிக்கப்பட்ட தடையால், விழா களை கட்டாமல் வெறிச்சோடியது.