| ADDED : ஜூலை 13, 2024 09:36 PM
புன்செய்புளியம்பட்டி,:ஈரோடு மாவட்டம் பவானிசாகரை அடுத்த புதுப்பீர் கடவை சேர்ந்தவர் வைத்தீஸ், 26. இவர், ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நான்கு வருடமாக கலெக்டரின் தபேதராக பணிபுரிந்தார். இவரின் மனைவி கவுசல்யா, 25. தம்பதியருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளன. பணி முடிந்து நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு வீட்டுக்கு வந்து உறங்கியவர், காலை பேச்சுமூச்சின்றி மூக்கில் நுரையுடன் கிடந்தார். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சத்தி அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனையில் வைத்தீஸ் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது.இதையறிந்த கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, சத்தி அரசு மருத்துவமனைக்கு விரைந்தார். வைத்தீஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு வைத்தீஸ் உடல் அனுப்பி வைக்கப்பட்டது. வீட்டில் துாங்க சென்ற தபேதார் மர்மமாக இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடற்கூறு பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே, இறப்புக்கான காரணம் தெரிய வரும் என பவானிசாகர் போலீசார் தெரிவித்தனர்.