| ADDED : ஏப் 26, 2024 04:04 AM
ஈரோடு: கோடை காலத்தில் நிலத்தை தரிசாக விடாமல், குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்ய, வேளாண் துறை யோசனை தெரிவித்துள்ளது.இதுபற்றி ஈரோடு வேளாண் துணை இயக்குனர் வெங்கடேசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் நவரை நெல் மற்றும் ராபி பருவ பயிர்களின் அறுவடைக்கு பின், நிலங்களை தரிசாக விடாமல் போதிய நீர் பாசன வசதியுடைய இடங்கள், கோடை மழையை பயன்படுத்தி குறுகிய கால மாற்றுப்பயிர்களை சாகுபடி செய்யலாம். இதன்படி உளுந்து, எள், நிலக்கடலை பயிர்களை பயிரிடலாம். இவை வறட்சியை தாங்கி வளரும். நீர் பாசன வசதியுடைய இடங்களில் குறைந்தளவு நீரை பயன்படுத்தலாம். சித்திரை மாதத்தில் இரு முறை கோடை உழவு செய்வதன் மூலம், பூச்சி நோய் காரணிகள் மற்றும் களை கட்டுப்படுவதுடன், நிலத்தில் காற்றோட்ட வசதி அதிகரித்து, மண் வளமும் மேம்படும்.போதிய நீர் வசதியுடைய அனைத்து விவசாயிகளும், நிலங்களை கோடையில் தரிசாக விடாமல், குறுகிய கால மாற்றுப்பயிர்களை பயிரிடுவதால், மண்ணின் வளத்தை காக்கலாம். பயிர் சாகுபடி குறித்த தொழில் நுட்பங்கள், மானிய விலையில் இடுபொருட்கள் விபரத்தை, அருகே உள்ள வட்டார, துணை வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் அறியலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.