உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தேர்தலை புறக்கணிப்பதாக ஆவேசம்

தேர்தலை புறக்கணிப்பதாக ஆவேசம்

பவானி:அம்மாபேட்டை அருகேயுள்ள பூதப்பாடி பஸ் நிறுத்தம் அருகில், 80 ஆண்டுகளாக, 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில், 39 குடும்பத்தினருக்கு பட்டா வழங்கப்படவில்லை. அதேசமயம் குடியிருக்கும் பகுதி, பூதகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் என்பதால், பலர் நிலத்துக்கான வாடகை செலுத்தி வருகின்றனர். நீண்ட காலமாக வசிப்பதால், பட்டா வழங்கலாம் என ஹிந்து சமய அறநிலையத்துறை, தடையில்லா சான்று வழங்கியுள்ளது. ஆனால், 20 ஆண்டுகளுக்கும் மேலாக வருவாய் துறை அதிகாரிகள் பட்டா வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருவதாக, குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவித்துள்ளனர். பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், பட்டா தராவிட்டால், லோக்சபா தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி, நேற்று மதியம் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் முரளி, அந்தியூர் தாசில்தார் கவியரசு, பவானி சட்டசபை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து கிருஷ்ணன் உள்ளிட்டோர், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.கோரிக்கை தொடர்பாக உயரதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறவே, தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ