| ADDED : மே 01, 2024 01:55 PM
ஈரோடு: ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு மீண்டும் தலை தூக்கியுள்ளதால், பயணிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். ஈரோடு மாநகராட்சி மத்திய பஸ் ஸ்டாண்டில், வணிக வளாகத்தில் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடை உரிமையாளர்கள், பயணிகள் நடைபாதையையும் ஆக்கிரமித்தனர். இதனால் பயணிகள் சிரமப்பட்டனர்.நடைபாதையில் செல்ல முடியாமல் பஸ்கள் நிற்கும் ரேக்குகள் வழியாக செல்ல நிலை ஏற்பட்டது. இதுகுறித்த புகார்கள் செல்லவே, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின்படி, நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், மீண்டும் ஆக்கிரமிப்பு தலை துாக்கி விட்டது. வணிக வளாக கடைகளின் முன்புறம் பயணிகள் நடந்து செல்ல வழியின்றி, பொருட்களை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். நடைபாதையில் கடைகளும் முளைத்துள்ளன. இதனால் பயணிகளும் வழக்கம்போல் பஸ் ரேக்குகளின் வழியாக ஒதுங்கி செல்லும் நிலை உருவாகியுள்ளது.