| ADDED : ஜூன் 10, 2024 02:02 AM
சத்தியமங்கலம்: வேட்டைத்தடுப்பு காவலர்களை தனியார் முகமைக்கு பணிமாற்றம் செய்யக்கூடாது என, தமிழக முதல்வர், வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு, பவானிசாகர் முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம் மனு அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வேட்டைத்தடுப்பு காவலர்கள், வனத்துறையில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதியம் அடிப்படையில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். வன விலங்குகளை பாதுகாத்தல், உயிர்கொல்லி விலங்குகளை பிடித்தல், வனத்தீயை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை உயிரை பணயம் வைத்து மேற்கொள்கின்றனர். இதில் -எளிய குடும்பத்து இளைஞர்களே பெரும்பாலும் உள்ளனர். பலர் பழங்குடியினரும் ஆவர். இவைர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை. விலங்கு தாக்குதலால் இறந்தால் நிவாரணமும் இல்லை. இவர்களை தற்போது வனத்துறையிலிருந்து தனியார் முகமைக்கு மாற்றம் செய்யப்படுவது தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக சத்தி புலிகள் காப்பகத்தில், வேட்டைத்தடுப்பு காவலர்களின் ஆவணங்கள் பெறப்பட்டு வருகிறது.முதல்வர் ஸ்டாலின் இப்பிரச்சனையில் தலையிட்டு, முதன்மை தலைமை வனப்பாதுகாவலரின் பணியாளர் விரோத சுற்றிக்கையை திரும்ப பெறச் செய்ய வேண்டும். சத்தி புலிகள் காப்பக வேட்டைத்தடுப்பு காவலர்களை, தனியார் முகமைக்கு மாற்றுவதை உடனடியாக கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.