| ADDED : ஜன 27, 2024 04:41 AM
சென்னிமலை: சென்னிமலையில் சுப்ரமணிய சுவாமி கோவிலில், நடப்பாண்டு தைப்பூச தேரோட்ட விழா, நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.முன்னதாக நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று அதிகாலை, 3:௦௦ மணிக்கு முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை, 6:15 மணிக்கு கைலாசநாதர் கோவிலில் இருந்து உற்சவ மூர்த்தி புறப்பாடு நடந்தது. தேர் நிலையை உற்சவ மூர்த்திகள் மூன்று முறை வலம் வந்த நிலையில், தேர்களில் வைக்கப்பட்டனர். முதல் தேரில் விநயாகப்பெருமான், பெரிய தேரில் தம்பதி சமேத முருகப்பெருமான் தங்க கவச அலங்காரத்திலும், மூன்றாம் தேரில் நடராஜர் எழுந்தருளினார். இதையடுத்து கோவில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவச்சாரியார் தலைமையில் சிறப்பு தீபராதனை நடந்தது. காலை, 6:40 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. முன்னாள் அமைச்சர் வெங்கடாச்சலம், வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் கந்தனுக்கு 'அரோகரா' முருகனுக்கு 'அரோகரா' என்று பக்தி கோஷம் முழங்கியபடி தேரை இழுத்தனர். சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள், தேர் மீது உப்பு மிளகு துாவியும், கடலை, நெல் துாவியும் முருகப்பெருமானை வழிபட்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு தைப்பூச இசை விழா குழு சார்பாக அன்னதானம் வழங்கபட்டது.பல்வேறு ஊர்களில் இருந்து நுாற்றுக்கணக்கான பக்தர்கள் காவடி சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். காலை, 6:55 மணிக்கு தெற்கு ராஜவீதியில் தேர் நிறுத்தப்பட்டது. மீண்டும் மாலை, 5:00 மணிக்கு தேரோட்டம் தொடங்கி தெற்கு, மேற்கு ரத வீதிகளில் வலம் வந்து, வடக்கு ரத வீதியில் நிறுத்தப்பட்டது. இன்று மாலை, 5:20 மணிக்கு நிலை அடைகிறது. தைப்பூச விழா முக்கிய நிகழ்ச்சியான மகா தரிசனம் வரும், 30ம் தேதி நடக்கிறது.