உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மும்பையில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பெண் குழந்தை; பவானியில் கூலி தொழிலாளி கைது

மும்பையில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பெண் குழந்தை; பவானியில் கூலி தொழிலாளி கைது

பவானி, மும்பையில் இருந்து பவானிக்கு, விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பெண் குழந்தையை, பவானி போலீசார் மீட்ட நிலையில், கூலி தொழிலாளியை கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், பவானி, பழைய பஸ் ஸ்டாண்ட், மீன் மார்க்கெட் அருகில் வசிப்பவர் பிரவீன்குமார், 32; கூலி தொழிலாளி. இவரின் மனைவி தேன்மொழி, 30; மீன் மார்க்கெட் தொழிலாளி. தம்பதிக்கு, 10 வயதில் மகன், 12 வயதில் மகள் உள்ளனர். தேன்மொழி நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்று விட, பிரவீண்குமார் மட்டும் வீட்டில் இருந்தார். இந்நிலையில் மதியம் வீட்டில் இருந்து குழந்தை அழுகுரல் கேட்டது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், குழந்தைகள் மைய உதவி எண், 1098ஐ தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழும அதிகாரிகள், பவானி போலீசாருடன், பிரவீன்குமார் வீட்டுக்கு சென்றனர். பிறந்து சில நாட்களேயான, பெண் குழந்தை அவரிடம் இருந்தது. குழந்தையை மீட்ட போலீசார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழும அதிகாரிகளிடம் ஒப்படைத்து, பிரவீன்குமாரை பவானி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.விசாரணையில், மும்பையில் இருந்து இரு பெண்களிடம் குழந்தையை விலைக்கு வாங்கியதாக தெரிவித்துள்ளார். அவர்கள் யார், எங்கு சென்றனர் என்பது குறித்து, பவானி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். பிரவீன்குமாரை பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-1ல் ஆஜர்படுத்தி, போலீசார் சிறையில் அடைத்தனர். அடுத்த சம்பவத்தால் அதிர்ச்சிபவானி, லட்சுமி நகர், கோணவாய்க்கால் பகுதியில், சாலையோரம் வசித்த வெளி மாநில தம்பதியின், நான்கு வயது பெண் குழந்தை, கடந்த மாதம் கடத்தப்பட்டது. இது தொடர்பாக ஏழு தனிப்படை அமைத்து சித்தோடு போலீசார் விசாரித்த நிலையில், சேலத்தில் வசித்த பொள்ளாச்சி-துறையூர் தம்பதியை கைது செய்து, 25 நாட்களுக்கு பிறகு குழந்தையை மீட்டனர்.இந்நிலையில் விற்பனை செய்வதற்காக, மும்பையில் இருந்து பெண் குழந்தை கொண்டு வரப்பட்டதும், பவானியில் தொழிலாளி கைது செய்யப்பட்டிருப்பதும், பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !