| ADDED : செப் 13, 2011 01:53 AM
ஈரோடு : அந்தியூர் யூனியன் வேம்பத்தி ஏரியில் மீன்பிடிக்க உரிமம் பெற்று
சங்கம் மூலம் மீன்பிடிப்பது குறித்து பலர் தவறான தகவல் பரப்புவதாக, மற்றொரு
தரப்பினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்தியூர் பெஸ்தவர் மீனவர்
கூட்டுறவு விற்பனை சங்கம் முன்னாள் தலைவர் பழனிசாமி மற்றும் 100க்கும்
மேற்பட்ட உறுப்பினர்கள், கலெக்டர் காமராஜிடம் அளித்த மனு: இச்சங்க
உறுப்பினர்கள் 350க்கும் மேற்பட்டவர்கள், வேம்பத்தி ஏரியில் மீன்பிடித்து
பிழைப்பு நடத்துகிறோம். இச்சங்க உறுப்பினர்கள் அந்தியூர் பெரிய ஏரி,
எண்ணமங்கலம் ஏரி, கெட்டிசமுத்திரம் ஏரி, வேம்பத்தி ஏரி மற்றும்
சந்தியபாளையம் ஏரியில் மீன்பிடிக்கிறோம். முறையான ஆதாரங்கள், ஆவணங்கள்
தாக்கல் செய்து, மீன்துறை மூலம் உரிமம் பெற்றுள்ளோம். பவானிசாகர்
பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு உட்பட்ட இந்த ஏரியின் குத்தகை தொகை, பவானி
மீன் துறை தனி அலுவலர் மூலம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கான ரசீது பெற்ற
பின்னரே, ஒவ்வொரு ஆண்டும் மீன் பிடிக்கிறோம். குத்தகை செலுத்திய சங்க
உறுப்பினர்கள், ஐந்து ஏரிகளிலும் மீன்குஞ்சுகள் இருப்பு செய்து வளர்த்து
வருகிறோம். இந்நிலையில், கீழ்வாணி கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த சிலர்,
எங்களது சங்கம் மீது தவறான தகவல்களை கூறுகின்றனர். நாங்கள் சங்கத்தின்
பெயரில் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு, தனி நபர்களுக்கு மீன்பிடிக்க உரிமை
கொடுப்பதாகவும், மீன் விற்க தடை விதிப்பதாகவும் கூறுகின்றனர். இந்த
ஏரிகளில் மீன்பிடிக்க நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளதாக கூறி, பலரை மிரட்டி
வருகின்றனர். தவிர, நாங்கள் உரிமம் பெற்றுள்ள நிலையில், அச்சங்கத்தினர்
திருட்டுத்தனமாக மீன்பிடிக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க
வேண்டும், என மனுவில் கேட்டுக் கொண்டனர்.