அந்தியூர்: உள்ளாட்சி தேர்தலில் 15 ஆண்டாக, அந்தியூர் டவுன் பஞ்சாயத்தை
கைக்குள் வைத்திருக்கும் தி.மு.க.,வை வெளியேற்றும் வகையில் அ.தி.மு.க.,
ம.தி.மு.க., தே.மு.தி.க., போன்ற கட்சிகள் தீவிரமாக களம்
இறங்கியுள்ளனர்.அந்தியூர் டவுன் பஞ்சாயத்தில் உள்ள 18 வார்டுகளில்,
தி.மு.க., 11, அ.தி.மு.க., 3, காங்கிரஸ், பா.ம.க., தலா ஒன்று, சுயேட்சை 2
கவுன்சிலர்கள் உள்ளனர். 4வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற
தி.மு.க.,வை சேர்ந்த வெங்கடாச்சலம் தலைவராக உள்ளார். இவர் 1996ல் இருந்து
15 ஆண்டாக அந்தியூர் டவுன் பஞ்சாயத்து தலைவராக உள்ளார்.வரும் உள்ளாட்சி
தேர்தலில் இப்பதவியை கைப்பற்ற தற்போதைய தலைவரும், அ.தி.மு.க.,வில் முன்னாள்
டவுன் பஞ்சாயத்து தலைவர் முனுசாமி நாயுடு உட்பட பலர், கடந்த தேர்தலில்
போட்டியிட்ட ம.தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் ராமன் மற்றும்
தே.மு.தி.க.,வினரும் முயற்சியில் உள்ளனர்.டவுன் பஞ்சாயத்து தலைவர்
வெங்கடாச்சலம், அந்தியூர் தி.மு.க., ஒன்றிய செயலாளராகவும் உள்ளார்.
இவருக்கு கட்சி ரீதியாக மட்டுமின்றி, மக்கள் செல்வாக்கும் அதிகம்.
இருப்பினும், 1996, 2001, 2006 ஆகிய 3 தேர்தலிலும் ஜாதி ரீதியான ஓட்டால்
வெற்றி பெற்றார்.அ.தி.மு.க., மற்றும் மாற்று கட்சியில் உள்ள இவரது உறவினர்கள், நெருக்கமான
பிரமுகர்களின் விசுவாசமும் வெற்றிக்கு வழி வகுத்தன.கடந்த சட்டசபை தேர்தலில்
வெற்றி வாகை சூடியதால், அந்தியூர் அ.தி.மு.க.,வினர் தற்போது
உற்சாகமடைந்து, தி.மு.க.,வின் 15 ஆண்டுகால பயணத்துக்கு முற்றுப்புள்ளி
வைக்க வேண்டுமென களம் இறங்கியுள்ளனர்.அ.தி.மு.க.,வின் இலவச திட்டங்களை
கூறியும், எம்.எல்.ஏ., ரமணிதரன், திருப்பூர் எம்.பி., சிவசாமி ஆகியோரைக்
கொண்டு தி.மு.க.,வை தோற்கடிக்க திட்டமிடப்பட்டுள்ளனர்.ஏற்கனவே தலைவர்
பதவிக்கு போட்டியிட்டு தோற்ற, ம.தி.மு.க., துணை செயலாளர் ராமன் தரப்பும்,
தி.மு.க.,வுக்கு 'ஆப்பு' வைக்க தயாராக உள்ளது.தேர்தல் பிரச்சாரத்துக்கு
தலைவர் என்னென்ன செய்தார்? எதுவெல்லாம் செய்யவில்லை என்பது பற்றி பட்டியல்
தயாரித்து வருகின்றனர்.தே.மு.தி.க.,வுக்கும் டவுன் பஞ்சாயத்து தலைவர் ஆசை வர, ஒன்றிய செயலாளர்
ராஜா சம்பத் உட்பட பலரும் 'சீட்'டை பெறுவதிலும், வெற்றி பெறுவதிலும்
தீவிரம் காட்டியுள்ளனர். தி.மு.க., தவிர மற்ற கட்சிகள் இங்கு மட்டுமாவது
இணைந்து, 15 ஆண்டு தி.மு.க., சாம்ராஜ்யத்தை தகர்க்க முடிவு செய்து
செயல்படுகின்றனர்.