ஈரோடு : ஈரோடு லோக்சபா தொகுதி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா முன்னிலையில் தேர்தல் பார்வையாளர்கள் (பொது) ராஜீவ் ரஞ்சன் மீனா, (காவல்) டாக்டர் ராம் கிருஷ்ண ஸ்வர்ன்கர், (செலவினம்) லட்சுமி நாராயணா ஆகியோர் அலுவலர்களுடன் ஆய்வு செய்தனர்.இந்த லோக்சபா தொகுதியில், 15 லட்சத்து, 28,758 வாக்காளர்கள் உள்ளனர். 6 சட்டசபை தொகுதியில், 1,688 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில், 172 ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவை. 6 தொகுதிக்கும் சேர்த்து தலா, 1,688 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வி.வி.பேட் ஆகியவை தயாராக உள்ளன. 335 கட்டுப்பாட்டு இயந்திரம், 335 ஓட்டுப்பதிவு இயந்திரம், 504 வி.வி.பேட் ஆகியவை கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது.கடந்த, 22ல் அந்தந்த தொகுதிக்கு தேவையான ஓட்டுப்பதிவு இயந்திரம் உள்ளிட்டவை அனுப்பி, பாதுகாப்பாக உள்ளன. குமாரபாளையம் தாலுகா அலுவலகம், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மாநகராட்சி அலுவலகத்திலும், ஈரோடு மேற்கு தொகுதிக்கு தாலுகா அலுவலகத்திலும், மொடக்குறிச்சிக்கு தாலுகா அலுவலகத்திலும், தாராபுரத்துக்கு அங்குள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியிலும், காங்கேயத்துக்கு தாலுகா அலுவலகத்திலும் இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.இந்த லோக்சபா தொகுதிக்கு மட்டும், 6 வீடியோ கண்காணிப்பு குழுக்கள், 6 வீடியோ பார்வைக்குழுக்கள், 6 கணக்கு குழுக்கள், 18 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 19 பறக்கும் படை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை, 28 புகார்கள் வரப்பெற்று, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.எஸ்.பி., ஜவகர், கூடுதல் கலெக்டர் மணிஷ், மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி, டி.ஆர்.ஓ., சாந்தகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.