| ADDED : நவ 21, 2025 01:30 AM
புன்செய்புளியம்பட்டி, சென்னை மற்றும் மதுரையில், ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக்கோப்பை போட்டி நடக்கிறது. இதற்கான கோப்பை, லோகோ, புன்செய் புளியம்பட்டியில் சப்-கலெக்டர் சிவானந்தம் முன்னிலையில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி நடத்தப்படுகிறது. இதன்படி இந்தாண்டு நடத்தப்படும் ஜூனியர் ஆண்கள் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரையில் நடக்கிறது. நவ.,28 ல் துவங்கி டிச.10ம் தேதி வரை போட்டி நடக்கிறது.சாம்பியன்ஸ் அணிக்கு வழங்கப்படும் உலகக்கோப்பை, போட்டிக்கான லோகோ சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை விளையாட்டை விளம்பரப்படுத்தும் பொருட்டு, தமிழகத்தை சேர்ந்த ஹாக்கி விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக, ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை மற்றும் லோகோவை, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியை தமிழக அரசு முன்னெடுத்து உள்ளது. இன்படி நேற்று புன்செய்புளியம்பட்டிக்கு வந்த உலகக்கோப்பை, பஸ் ஸ்டாண்டில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ஹாக்கி போட்டியில் பல்வேறு சாதனை படைத்த கே.ஓ.எம்., அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கோபி சப்-கலெக்டர் சிவானந்தம் அறிமுகப்படுத்தினார். முதன்மை கல்வி அலுவலர் மான்விழி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ்குமார், பள்ளி தலைமை ஆசிரியை உமாகவுரி, அரசு அலுவலர்கள், பிரதிநிதிகள், ஹாக்கி விளையாட்டு வீரர்கள் கோப்பையுடன் போட்டோ எடுத்து கொண்டனர்.