உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பர்கூர் வனப்பகுதியில் 8 இடங்களில் மண் சரிவு

பர்கூர் வனப்பகுதியில் 8 இடங்களில் மண் சரிவு

அந்தியூர்: ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதியான தாமரைக்கரை, சின்ன செங்குளம், பெரிய செங்குளம், மடம், ஈரொட்டி, கொங்காடை, மணியாச்சி ஆகிய பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு, 8:30 மணியளவில் பலத்த மழை பெய்ததால், தாமரைக்கரையில் இருந்து அந்தியூர் செல்லும் சாலையில், ஆங்காங்கே எட்டு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள், பர்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், நெடுஞ்சாலைத்துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு சம்பவ இடங்களுக்கு வந்தனர். சிறிய அளவில் மட்டுமே மலையில் இருந்த பாறைகள், உருண்டு சாலையில் விழுந்துள்ளதும், மேலும் ஒரு சில இடங்களில், மலையில் உள்ள மண் சரிந்து சாலையில் விழுந்துள்ளதும், மூன்று இடங்களில், மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல், சாலைகளில் பள்ளம் ஏற்பட்டு சாலையோர பகுதி சேதமடைந்தது தெரியவந்தது. மொத்தம் எட்டு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.இரவோடு இரவாக, நெடுஞ்சாலைத்துறையினர், போக்குவரத்துக்கு இடையூறு எதுவும் இன்றி, மண் சரிவுகளை சரி செய்தனர். இதனால், சாலையின் இருபுறமும் வாகனங்கள் வரிசையாக நின்றிருந்தன. ஒரு மணி நேரத்துக்கு பின் பணிகள் நிறைவு பெற்றது. இதையடுத்து, அந்தியூரில் இருந்து பர்கூர் வழியாக கர்நாடகா செல்லும் வாகனங்களும், பர்கூர் வழியாக அந்தியூர் வரக்கூடிய வாகனங்களும் மெதுவாக சென்றன. சாலைகளில் சேதமடைந்த பகுதிகளை, நெடுஞ்சாலைத்துறையினர், பர்கூர் வனத்துறையினர், நேற்று காலை ஆய்வு செய்தனர். பர்கூர் வனப்பகுதி அடிவாரத்தில், 33.46 அடி உயரம் கொண்ட வரட்டுப்பள்ளம் அணையில் தற்போது, 32.22 அடி நீர் உள்ளது. வரட்டுப்பள்ளம் அணை பகுதியில், 39.6 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ