ஈரோடு : ஈரோடு லோக்சபா தொகுதியில் மட்டுமின்றி, மாவட்ட அளவில் அனைத்து ஓட்டுச்சாவடியிலும் கடும் வெயிலுக்கும் இடையே நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டுப்பதிவு செய்தனர்.ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 2,222 ஓட்டுச்சாவடியில், 19.50 லட்சம் வாக்காளர்கள் நேற்று ஓட்டுப்பதிவு செய்ய, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. காலை, 5:30 மணிக்கு வேட்பாளர்கள் அல்லது அவர்களது முகவர்களின் முன்னிலையில் மாதிரி ஓட்டுப்பதிவு நடந்தது.ஈரோடு குமலன்குட்டை, மேட்டுநாசுவம்பாளையம் உட்பட, 60 ஓட்டுச்சாவடியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், வி.வி.பேட் பழுதானது. அவற்றை சில நிமிடங்களில் மாற்றி தயார் செய்தனர்.காலை, 7:00 மணி முதல் வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு செய்தனர். 80 சதவீத வாக்காளர்கள் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டிருந்த 'பூத் சிலிப்'பை எடுத்து வந்ததால், சரி பார்ப்பு பணி விரைவாக நடந்தது. முதியோர், கர்ப்பிணி, கைக்குழந்தைகளுடன் வந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், உடல் நலக்குறைவாக வந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கி, ஓட்டுப்பதிவு செய்ய வைத்து அனுப்பினர். பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளில் ஷாமியானா வசதி செய்யப்பட்டிருந்ததால், வெயிலுக்கு மத்தியிலும் அமைதியான தேர்தல் நடந்தது.மாற்றுத்திறனாளிகள் மற்றும், 85 வயதுக்கு மேற்பட்டோர், 'சக்ஷன்' செயலியில் பதிவு செய்த, 15க்கும் மேற்பட்டோர் இலவசமாக வாகனத்தில் வந்து ஓட்டு போட்டு சென்றனர்.ஈரோடு கிழக்கு தொகுதியில், காந்திஜி சாலை அரசு மாதிரி பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த பெண் அலுவலர்கள் மட்டுமே பணியாற்றும் ஓட்டுச்சாவடியில், பெண் வாக்காளர்களுக்கு ரோஜாப்பூ வழங்கி, ஓட்டுப்பதிவு செய்ய அனுமதித்தனர். ஈரோடு எஸ்.கே.சி., சாலை மாநகராட்சி நடுநிலை பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக ஓட்டுச்சாவடி அமைத்திருந்தனர். அங்கும் பூ வழங்கி வரவேற்றனர்.ஈரோடு சி.எஸ்.ஐ., பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச்சாவடியில், குழந்தைகளுடன் வந்த பெற்றோர், ஓட்டுப்பதிவு செய்ய சென்றபோது, அங்கு குழந்தைகள் விளையாட வசதி செய்து உற்சாகப்படுத்தினர்.ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, பெரியார் வீதி, வளையக்கார வீதி, மீரான் மொய்தீன் வீதிகளில் அதிகமாக வடமாநிலத்தவர் ஓட்டுப்பதிவு செய்தனர்.ஈரோடு லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, 6 சட்டசபை தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த, 1,688 ஓட்டுச்சாவடியில், 172 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை. இங்கு கேரளா, குஜராத், ஆந்திரா மாநில போலீஸார், மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.அனைத்து இடங்களிலும் அமைதியாக ஓட்டுப்பதிவு நடந்ததால், ஈரோடு லோக்சபா தொகுதியில் காலை, 9:00 மணிக்கு, 12.89 சதவீதம், 11:00 மணிக்கு, 28.29 சதவீதம், 1:00 மணிக்கு, 43.54 சதவீதம், 3:00 மணிக்கு, 55.01 சதவீதம் ஓட்டுப்பதிவானது.