| ADDED : ஜூலை 22, 2024 01:51 AM
கள்ளக்குறிச்சி : கச்சிராயபாளையம் காவல் நிலையம் மற்றும் கல்வராயன்மலையில் ஆய்வு மேற்கொண்ட ஏ.டி.ஜி.பி., ட்ரோன் கேமரா மூலம், சாராயம் காய்ச்சப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.கள்ளக்குறிச்சி, விழுப்புரம், மற்றும் கடலுார் மாவட்டங்களில் சட்டம், ஒழுங்கு குறித்தும், கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாகவும் ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் ஆசிர்வாதம் நேற்று முன்தினம் கடலுாரில் ஆலோசனை நடத்தினார்.தொடர்ந்து நேற்று கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின், கல்வராயன்மலையில் உள்ள வெள்ளிமலை, சேராப்பட்டு, குறும்பலுார், ஆவலுார், சிறுகலுார் உள்ளிட்ட பகுகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.அப்பகுதிகளில் சாராயம் காய்ச்சியது மற்றும் விற்பனை வழக்குகள் தொடர்பாக கேட்டறிந்தார். இதுவரையில் சாராயம் காய்ச்சப்பட்ட இடங்களை பார்வையிட்டார். தொடர்ந்து, சிறுகலுார் வனப்பகுதியில் இருந்து ட்ரோன் கேமரா மூலம் மலையில் எங்கேனும் சாராயம் காய்ச்சப்படுகிறதா என ஆய்வு செய்தார்.கரியாலுார் காவல் நிலையத்தில் பணியில் உள்ள போலீசாரின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்து, கூடுதல் போலீசாரை நியமிப்பது குறித்தும், கல்வராயன்மலை பகுதியில் சுழற்சி அடிப்படையில் பட்டாலியன் போலீசாரை பணியமர்த்துவது குறித்தும் ஆலோசனை நடத்தினார். வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க், எஸ்.பி., ரஜத் சதுர்வேதி உடனிருந்தனர்.