கள்ளக்குறிச்சி: சின்னசேலம் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் தி.மு.க., வேட்பாளர் மலையரசன் பிரசாரம் மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., சின்னசேலம் நகர பகுதியில், தி.மு.க., வேட்பாளர் மலையரசனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது;தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, சின்னசேலம் நகர பகுதியில் பல்வேறு திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. முதல்வர் ஸ்டாலின் மகளிர் நலன் கருதி, கட்டணமில்லா பேருந்து, மக்களை தேடி மருத்துவம், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிகளவு கடனுதவி, மகளிர் உரிமைத்தொகை என எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.முதல்வர் ஸ்டாலினின் நல்லாட்சி தொடர உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மலையரசனை வெற்றி பெற செய்யுங்கள் என எம்.எல்.ஏ., பேசினார்.காந்திநகர், விஜயபுரம், மேட்டுத்தெரு, வடுகர்தெரு, கடைவீதி உட்பட 18 வார்டுகளிலும் பிரச்சாரம் நடந்தது. அனைத்து பகுதிகளிலும் வேட்பாளர் மலையரசனுக்கு ஆரத்தி எடுத்தும், மலர் துாவியும் பெண்கள் வரவேற்பு அளித்தனர்.முன்னதாக, வேட்பாளர் மலையரசன் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது, தி.மு.க., மாநில மகளிரணி துணை செயலாளர் அங்கையற்கண்ணி, காங்., மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ், சின்னசேலம் பேரூராட்சி சேர்மன் லாவண்யா, வி.சி., மாவட்ட செயலாளர் மதியழகன், மூவேந்தர் முன்னேற்ற கழக நகர செயலாளர் ராஜா, தி.மு.க., நகர செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் அன்புமணிமாறன், நிர்வாகி அருள், குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.