| ADDED : ஏப் 15, 2024 03:29 AM
கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க.,வினர் பொதுச் செயலாளர் பங்கேற்ற பொதுக் கூட்டத்திற்கு சென்றதால் தி.மு.க.,வினர் எவ்வித எதிர்ப்புமின்றி வாக்காளர்களை 'கவனித்து' விட்டதாக கட்சியினர் தம்பட்டம் அடித்து வருகின்றனர்.தேர்தல் என்றாலே பணம் பட்டுவாடா என்பது தமிழக தேர்தலில் எழுதப்படாத விதிமுறை. திராவிட கட்சிகளின் தேர்தல் நடைமுறையில் ஓர் அங்கமாகவே மாறிப்போன பட்டுவாடாவை தேசியக் கட்சிகளும் பின்பற்றத் தொடங்கி விட்டன.கள்ளக்குறிச்சி மாவட்டத்தைப் பொருத்தவரை தி.மு.க., - அ.தி.மு.க., இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதில், யார் முதலில் பணம் கொடுப்பார்கள். அடுத்து யார் கொடுப்பார்கள். ஒருவர் கொடுத்த தொகையையே மற்றவரும் கொடுத்தால் இரண்டாம் கட்டமாக பணம் கிடைக்குமா என்ற விவாதம் வாக்காளர்களிடையே சில நாட்களாக பட்டிமன்றமாகவே நடக்கிறது.இந்நிலையில், நேற்று மாலை அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியின் பொதுக் கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்தது. இதற்காக அக்கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் படையெடுத்தனர்.இதனை சரியான நேரமாக கணித்த தி.மு.க., நேற்று மதியம் 2:00 மணிக்கு கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதிக்குட்பட்ட ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சிகளில் பணம் பட்டு வாடாவை துவங்கியது. ஓட்டுக்கு 300 ரூபாய் வீதம் ஒரு சில மணி நேரத்தில் எவ்வித பிரச்னையுமின்றி விநியோகித்து முடித்தனர்.தி.மு.க.,வின் பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு அ.தி.மு.க.,வினர் புகார் அளிக்க கூட முடியாத சூழலில் தி.மு.க.,வின் பண பட்டுவாடா நிகழ்ந்துள்ளது.அ.தி.மு.க.,வும் ஒரு சில நாட்களில் விநியோகத்தை முடிக்க தயாராகி வருவதாக அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.ஐந்து நாட்களுக்கு முன்பாகவே பண விநியோகம் செய்து விட்டால் வாக்காளர்களுக்கு மறதி ஏற்பட்டு விடும் எனவே நெருக்கத்தில் பண விநியோகம் செய்யலாம் என பண விநியோகத்தை தள்ளி வைத்திருப்பதாக அ.தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.நெருக்கத்தில் அ.தி.மு.க., பணம் பட்டுவாடாவை பிரச்னை இன்றி முடித்து விட்டால், இரண்டாம் சுற்றாக களம் இறங்க தி.மு.க., தயார் என உடன் பிறப்புகள் கூறி வருகின்றனர்.-நமது நிருபர்-