உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பள்ளி கல்வித்துறை மீது பெற்றோர்கள் கடும் அதிருப்தி: கல்வியில் பின்தங்கிய கள்ளக்குறிச்சி மாவட்டம்

பள்ளி கல்வித்துறை மீது பெற்றோர்கள் கடும் அதிருப்தி: கல்வியில் பின்தங்கிய கள்ளக்குறிச்சி மாவட்டம்

கள்ளக்குறிச்சி: கல்வியில் மிகவும் பின்தங்கி செல்லும் மாவட்டமாக கள்ளக்குறிச்சிஇருப்பதால், பள்ளி கல்வித்துறை மீது பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.கடந்த 2019ம் ஆண்டு தமிழகத்தின் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, அதில் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டமாக இருந்தபோது, கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்களும், சென்டம் மதிப்பெண்களும் பெற்று மாநில அளவில் சாதனை படைத்தனர். ஒரு கால கட்டத்தில் 'கல்வி'குறிச்சி என்று அழைக்கும் வகையில் கள்ளக்குறிச்சி திகழ்ந்தது. இந்நிலையில், புதிய மாவட்டமாக செயல்படும் பட்சத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வியில் மிகப்பெரிய முன்னேற்றம் அடையும் என்பது பெரும்பாலோனரின் எண்ணமாக இருந்தது.ஆனால், கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த 2019-20ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வும், 2020-21ம் கல்வியாண்டில் 10 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளும் நடைபெறவில்லை. தொடர்ந்து, கொரோனா தொற்றின் தாக்கம் படி, படியாக குறைந்ததால் முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதனால், கடந்த 2021-22ம் கல்வியாண்டில் இருந்து 10 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து வருகிறது. இதில், கல்வியில் முன்னேற்றம் அடைந்த மாவட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட பெற்றோர்களுக்கு, பிளஸ்-2, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தின.இவ்வாண்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 122 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் 17,198 பேர் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதினர். இதில் 15,978 பேர் தேர்ச்சி பெற்றனர். 92.91 சதவீத தேர்ச்சியை பெற்று, தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில், 29 வது இடத்தை கள்ளக்குறிச்சி மாவட்டம் பிடித்தது. கடந்த 2022-2023ம் கல்வியாண்டில் மாநில அளவில் 30வது இடத்தில் இருந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், தற்போது 1.85 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்று 29வது இடத்திற்கு முன்னேறியது. அதேபோல், 214 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 20,126 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் 17,476 பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 86.83. கடந்த 2022-23ம் கல்வியாண்டில் 89.34 சதவீத தேர்ச்சியுடன், மாநில அளவில் 28வது இடத்தில் இருந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், தற்போது 2.51 சதவீதம் (86.83) குறைவான தேர்ச்சியுடன், 34வது இடத்திற்கு பின்நோக்கி சென்றது.மேலும், 122 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 18,952 பேர் பிளஸ்-1 பொதுத்தேர்வினை எழுதினர். இதில், 16,299 பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் 86. கடந்த 2022-23ம் கல்வி ஆண்டில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் 87.08 சதவீத தேர்ச்சியுடன் மாநிலத்தில் 29வது இடத்தில் இருந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் தற்போது 1.08 சதவீதம் குறைந்து (86 சதவீதம்) மாநிலத்தில் 36வது இடத்தில் உள்ளது.பொதுத்தேர்வுகளில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் குறைந்ததால், கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வியில் மிகவும் பின்தங்கி நிலையில் சென்றுள்ளது. இதனால், மாவட்ட பள்ளி கல்வித்துறை மீது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே, வரும் கல்வியாண்டில் கல்வியில் முன்னேற்றம் காணும் பொருட்டு பள்ளி கல்வி துறையின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை