உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  சாத்தனுார் அணையில் தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தம்

 சாத்தனுார் அணையில் தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தம்

திருக்கோவிலுார்: டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சாத்தனுார் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனுார் அணையின் முழு கொள்ளளவு உயரம் 119 அடி. அதன் முழு உயரத்தை எட்டாத நிலையில், டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கடந்த 26ம் தேதி அணையிலிருந்து வினாடிக்கு 2,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. வானிலை ஆய்வு மையம் கணித்த அளவை விட மழையின் தாக்கம் குறைவாக இருந்ததால், வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 950 கன அடி என்ற விகிதத்தில் படிப்படியாக குறைக்கப்பட்டது. எனினும் தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தால், கடந்த 28ம் தேதி அணையிலிருந்து திறக்கப்படும் நீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு 498 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து நீர் எதுவும் வெளியேற்றப்படவில்லை. அணையில் 115.50 அடி அதாவது 6,549 மில்லியன் கன அடி நீர், 89.45 சதவீதம் இருப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழை இனி வரும் நாட்களில் வானிலை ஆய்வு மையம் கணித்த அளவில் மழை பெய்தால் மட்டுமே அணை அதன் முழு கொள்ளளவான 119 அடியை எட்டும் சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக தென்பனையாற்றில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை