| ADDED : ஜூலை 30, 2024 07:22 AM
திருவேற்காடு: வெளிநாட்டில் இருந்து வந்தவர் வீட்டில், 100 சவரன் நகைகள் மற்றும் 50,000 ரூபாய் கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம், இ.ஜி.பி., நகரைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன், 45. இவர், சவுதி அரேபியாவில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பொது மேலாளராக பணி புரிந்து வருகிறார்.இவரது மனைவி கோகிலா, 40. தம்பதியின் மகள் பவதாரணி, 16; பிளஸ் 1 படித்து வருகிறார். ஜனார்த்தனன் ஒன்றரை மாதங்களுக்கு முன் விடுப்பில் சென்னை வந்துள்ளார்.நேற்று முன்தினம் மாலை, குடும்பத்துடன் அண்ணா நகரில் உள்ள 'ஷாப்பிங்' மாலுக்கு சென்றுள்ளார். இரவு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.பீரோவில் வைத்திருந்த 100 சவரன் நகை மற்றும் 50,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது. வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகள் மற்றும் கைரேகை பதிவுகள் கைப்பற்றி திருவேற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.ஜனார்த்தனன் 'ஷாப்பிங்' சென்ற நேரம் பார்த்து, வீட்டில் திருட்டு நடந்திருப்பதால் தெரிந்தவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம். அல்லது பல நாட்களாக நோட்டமிட்டு கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியிருக்கலாம் என, பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.