| ADDED : ஏப் 30, 2024 09:41 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு அடுத்த சக்கரமநல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் துளசிராமன் 41; கட்டட தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் வழக்கம்போல வேலைக்காக சென்னை சென்றார்.வீட்டில் மனைவி மற்றும் மகள் இருந்த நிலையில், மதியம் 1:30 மணிக்கு வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதாக, 'ஹூரோ ஹோண்டா பேஷன்' இருசக்கர வாகனத்தில் வந்த ஆண் மற்றும் இரு பெண்கள் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர்.மேலும், வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால், வீட்டு வாசலில் அமர்ந்து விட்டு செல்வதாக கூறியுள்ளனர். இதையடுத்து, துளசிராமனின் மனைவி மற்றும் மகள் கால்நடைகளுக்கு உணவளிக்க வீட்டின் பின்புறம் சென்றுள்ளனர்.இதை தொடர்ந்து, வீட்டிற்குள் புகுந்த மூன்று பேரும், பீரோவை உடைத்து, அதிலிருந்த 3 சவரன் நகை மற்றும் 4,000 ரூபாயை திருடி சென்றனர்.பட்டப்பகலில் வெயிலுக்கு ஒதுங்குவதை போல நடித்து, திருட்டு சம்பவம் நடந்தது, அப்பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, துளசிராமன் புகாரின்படி வழக்கு பதிந்த திருவாலங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.